26 வார கருவை கலைக்க மனு.. “குழந்தை நல்லா இருக்கு!” பெண்ணின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்
டெல்லி: திருமணமான பெண் கர்ப்பமாகி 26 வாரத்தில் தன்னுடைய கருவை கலைக்க அனுமதி கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து இருக்கிறது.
திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயான பெண் ஒருவர் தனது 26 வார கருவை கலைக்க அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். தான் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், பொருளாதார அடிப்படையிலும், உணர்வு ரீதியாகவும், மன ரீதியாகவும் 3 வது குழந்தையை பெற்று வளர்க்கும் நிலையில் இல்லை என அவர் தன்னுடைய மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கு கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பெண்ணின் உடல், மன பிரச்சனைகளை கருத்தில் கொண்டு கருவை மருத்துவ ரீதியாக கலைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை திரும்பப் பெறக் கோரி மத்திய அரசு மனு ஒன்றை தாக்கல் செய்தது. அந்த மனு மீதான விசாரணை கடந்த அக்டோபர் 11 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் இரு பெண் நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகளில் ஒருவரான ஹீமா கோஹ்லி, மத்திய அரசின் மனுவை ஏற்கும் வகையில் பெண்ணின் கருவை கலைக்க அனுமதி வழங்க தான் விரும்பவில்லை என தீர்ப்பு வழங்கினார். மற்றொரு நீதிபதியான நாகரத்னா, அக்டோபர் 9 ஆம் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெறக் கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை நிராகரித்து, கருக்கலைப்புக்கு அனுமதி அளிப்பதாக தீர்ப்பு வழங்கினார்.
இருவரும் மாறுபட்ட தீர்ப்பை அளித்ததால், இந்த வழக்கு மூன்றாவது நீதிபதியான உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் விசாரிக்கப்படும் என நீதிபதிகள் ஹீமா கோஹ்லி மற்றும் பி.வி.நாகரத்னா அமர்வு தெரிவித்தது. இந்த வழக்கு கடந்த 13 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி, சம்பந்தப்பட்ட பெண் மற்றும் அவரது கருவின் நிலையை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உத்தரவிட்டார்.
இந்த நிலையில் எய்ம்ஸ் மருத்துவர்கள் பெண்ணையும் கருவையும் ஆய்வுக்கு உட்படுத்தி புதிய அறிக்கையை தாக்கல் செய்தார்கள். அதில், பெண்ணின் பிரசவ காலம் என்பது 24 வாரங்களை கடந்துவிட்டதாகவும், தற்போது தோராயமாக 26 வாரங்கள் 5 நாட்களில் அது இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் கரு நல்ல நிலையில் இருப்பதாகவும் எய்ம்ஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. எய்ம்ஸ் அறிக்கையை மேற்கோள்காட்டி கருவை கலைக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தார் தலைமை நீதிபதி சந்திரசூட்.
உரிய நேரத்தில் எய்ம்ஸ் மருத்துவர்களால் அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்க்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. சட்டப்படி கருவுக்கு உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ பாதிப்புகள் இருந்தால் மட்டுமே 24 வாரங்களுக்கு கருக்கலைப்பு செய்ய முடியும் எனவும், நல்ல நிலையில் உள்ள கருவை கலைக்க சட்டத்தில் அனுமதி இல்லாததால் கருக்கலைப்புக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளிக்க மறுத்து உள்ளதாக அந்த அமர்வில் இடம்பெற்று இருந்த நீதிபதிகள் ஜேபி பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா கூறி உள்ளனர்.












Click it and Unblock the Notifications