ஏர் இந்தியா விமான விபத்து.. பைலட் மீது தவறு என்று அறிக்கை லீக்! உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டிப்பு
டெல்லி: அகமதாபாத் அருகே ஜூன் 12 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்துக்கான Aircraft Accident Investigation Bureau (AAIB) முதல்கட்ட அறிக்கை வெளியானது தொடர்பாக உச்சநீதிமன்றம் இன்று கடுமையாக விமர்சித்துள்ளது.
"விசாரணை முடிவடையும்வரை முழு ரகசியம் காக்கப்பட வேண்டும். தேர்வு செய்து சில பகுதிகளை மட்டும் வெளியிடுவது தவறான புரிதலை உருவாக்குகிறது" என நீதிபதிகள் சூர்யகாந்த், என்.கோடிச்வர் சிங் தலைமையிலான அமர்வு தெரிவித்தது.
"முதற்கட்ட விசாரணை அறிக்கையை தனித்தனியாகவும், பகுதி பகுதியாகவும் வெளியிட்டது துரதிர்ஷ்டவசமானது. விசாரணை முடியும் வரை, முழுமையான ரகசியத்தன்மையைப் பேணுவது முக்கியம்," என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இதுபோன்ற துயரங்கள் பெரும்பாலும் போட்டி விமான நிறுவனங்களால் பயன்படுத்திக் கொள்ளப்பட வாய்ப்புள்ளது. அது நடக்க கூடாது என்றும் கூறினர்.

AAIB முதல்கட்ட அறிக்கையில், விமானம் பறக்க தொடங்கிய மூன்று விநாடிகள் கழித்து fuel control switch "CUTOFF" நிலையில் மாறியது, இதனால் இரு இயந்திரங்களும் செயலிழந்தன எனக் கூறப்பட்டுள்ளது. காக்பிட் குரல் பதிவில் (CVR) ஒருபைலட் "யார் சுவிட்சை ஆஃப் செய்தார்?" என்று கேட்டதையும், மற்றொரு பைலட் "நான் செய்யவில்லை" என பதிலளித்ததையும் பதிவு செய்ததாக கூறப்பட்டது. ஆனால் அது தவறுதலா அல்லது உள்நோக்கத்துடனான செயலா என்பதை தெளிவுபடுத்தவில்லை.
குற்றச்சாட்டு
வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண், 5 பேர் கொண்ட விசாரணைக் குழுவில் 3 பேர் DGCA அதிகாரிகள் என்பதால், இந்த அறிக்கை அம்சங்கள் "பாரபட்சமானது" என்று வாதித்தார். DGCA-வின் அலட்சியம் கூட இந்த விபத்தில் விசாரணைக்கு உட்படுகிறது என அவர் குறிப்பிட்டார்.
இதற்கு நீதிபதி சூர்யகாந்த், "DGCA அதிகாரிகள் இருப்பதால் தவறு செய்தவர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்றுதான் அர்த்தமில்லை. தனிநபர் பொறுப்புகள் கண்டறியப்பட்டால் தண்டனை தவிர்க்க முடியாது" எனக் கூறினார்.
மேலும் மனுவில், DFDR (Digital Flight Data Recorder) முழுப் பதிவுகள், நேரத்துடன் கூடிய CVR (Cockpit Voice Recorder) உரையாடல் நகல்கள், EAFR (Electronic Aircraft Fault Recording) தரவு ஆகியவை அறிக்கையில் வெளியிடப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டன் கேட்விக் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787-8 (AI171) விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் மருத்துவ விடுதி கட்டடத்தில் மோதியது. இதில் 265 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 169 இந்தியர்கள், 52 பிரிட்டன்ஸ், 7 போர்ச்சுகீசியர்கள், 1 கனடியர் மற்றும் 12 பணியாளர்கள் அடங்குவர்.











Click it and Unblock the Notifications