ஐ பெரியசாமிக்கு நிம்மதி! சொத்துகுவிப்பு வழக்கில் ஹைகோர்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை! சுப்ரீம் கோர்ட்
டெல்லி: சொத்துகுவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ பெரியசாமி விடுவிப்பை ரத்து செய்த சென்னை ஹைகோர்ட்டின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் பதில் அளிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ஹைகோர்ட் உத்தரவுக்கு எதிராக ஐ பெரியசாமி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அமைச்சரவையில் மூத்த அமைச்சர்களில் ஒருவராக இருப்பவர் ஐ. பெரியசாமி. ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக ஐ பெரியசாமி இருந்து வருகிறார். ஐ பெரியசாமி கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரையிலான தி.மு.க. ஆட்சியில், அமைச்சராக இருந்த போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.2 கோடி சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.

இந்த புகாரின் பேரில் ஐ பெரியசாமி மற்றும் அவரது மனைவி சுசீலா, மகன்கள் செந்தில்குமார், பிரபு ஆகியோர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த திண்டுக்கல் நீதிமன்றம், ஐ பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து உத்தரவு பிறப்பித்தது. இதன் பின்னர் லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கினை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், ஐ பெரியசாமி மற்றும் குடும்பத்தினரை விடுவித்தது செல்லாது என கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்து, 6 மாதங்களுக்குள் விசாரணையை முடிக்குமாறு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டனர். இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஐ பெரியசாமி மேல் முறையீடு செய்துள்ளார்.
இந்த மனு வரும் இன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி திபான்கர் தத்தா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், சொத்துகுவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ பெரியசாமி விடுவிப்பை ரத்து செய்த சென்னை ஹைகோர்ட்டின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் பதில் அளிக்கவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
நேற்று முன் தினம் தான் ஐ பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை, திண்டுக்கல் உள்பட ஐ பெரியசாமிக்கு சொந்தமான பல்வேறு இடங்களில்
அமலாக்கத்துறை சோதனை நடந்தது. ஐ பெரியசாமியின் மகனும் பழனி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏவுமான ஐபி செந்தில் குமார் மற்றும் வள்ளலார் நகரில் உள்ள ஐ பெரியசாமி மகள் இந்திரானி இல்லத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகின. இந்த நிலையில் தான் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications