மெட்ரோ ரயிலில் கொட்டிய உணவு.. சட்டென மாணவன் செய்த காரியம்.. 'வாவ்'.. குவியும் பாராட்டு
டெல்லி: டெல்லி மெட்ரோ ரயிலில் தனது உணவு கொட்டியவுடன் அவற்றை தாமாகவே ஒரு பள்ளி மாணவன் சுத்தம் செய்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
கொட்டிய உணவை பணியாளர்கள் சுத்தம் செய்துவிடுவார்கள் என சக பயணிகள் கூறிய போதிலும், எதை பற்றியும் யோசிக்காமல் அந்த மாணவனே அவற்றை அப்புறப்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
'தூய்மை இந்தியா' திட்டம் இப்போதுதான் சிறிது சிறிதாக நாட்டு மக்களிடையே விழிப்புணர்வை புகுத்தி வரும் நிலையில், மாணவனின் இந்த செயல் எதிர்கால இந்தியா குறித்த நம்பிக்கையை ஏற்படுத்துவதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

இந்தியாவும் தூய்மையும்
தூய்மை என்ற விஷயத்தை எடுத்துக்கொண்டால், நம் அக்கம்பக்கத்து நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம் ஆகியவற்றை விட இந்தியா பல நிலைகளில் முன்னணியில்தான் உள்ளது. ஆனால் சற்றே அந்த பக்கமாக அதாவது சிங்கப்பூர், மலேசியாவுக்கு சென்றால், இந்தியா தூய்மை விஷயத்தில் மிக மோசமாக நிலையில் இருக்கிறது என்பது தெரியவரும். அந்த நாடுகளில் எல்லாம் பொது இடங்களில் எச்சில் உமிழ்வதற்கு கூட தடை விதிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், நம் நாட்டிலோ எங்கு வேண்டுமானாலும் சிறுநீர் கழிக்கலாம் என்ற அவல நிலையே காணப்படுகிறது. இதனால்தான் சுத்தத்தின் அவசியத்தை உணர்த்த 'தூய்மை இந்தியா' திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

ரயிலில் கொட்டிய உணவு
இந்நிலையில், எதிர்காலத்தில் இந்தியா, தூய்மை விஷயத்தில் பல மடங்கு வளர்ச்சி அடையும் என்பதற்கு சான்றாக ஒரு விஷயம் டெல்லியில் நடந்துள்ளது. டெல்லி மெட்ரோ ரயிலில் இரு தினங்களுக்கு முன்பு 8-ம் வகுப்பு படிக்கத்தக்க ஒரு பள்ளி மாணவன் பயணம் செய்து கொண்டிருந்தான். அப்போது தனது பையில் இருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்த போது அவனது டிபன் பாக்ஸ் கீழே விழுந்து உணவு மொத்தமும் தரையில் கொட்டியுள்ளது.

ஒரு பருக்கை கூட விடாமல்..
இதையடுத்து, அந்த மாணவன் கீழே கொட்டிய உணவை சுத்தம் செய்ய முயற்சித்திருக்கிறான். அப்போது அங்கிருந்த சக பயணிகள் அவனை தடுத்து, "இதை பணியாளர்கள் சுத்தம் செய்து விடுவார்கள்" எனக் கூறியுள்ளனர். ஆனால், அந்த மாணவனோ அவர்கள் பேச்சை கேட்காமல், தனது ஒரு நோட்டுப் புத்தகத்தில் இருந்து சில தாள்களை கிழித்து, கொட்டிய உணவை ஒரு பருக்கை விடாமல் கையில் எடுத்து தாள்களில் போட்டுள்ளான். அத்துடன் விடாமல், தண்ணீரை ஊற்றி தனது கைக்குட்டை மூலம் தரையில் உள்ள உணவுக் கறையையும் அவன் சுத்தம் செய்துள்ளான்.

எதிர்கால சிங்கப்பூர்..
மாணவனின் இந்த செயலை அங்கிருந்த சக பயணி ஒருவர், தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட, தற்போது அந்த மாணவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்தியா எதிர்காலத்தில் சிங்கப்பூரை போல மாறிவிடும் என இந்த மாணவனின் செயல் உணர்த்துவதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். மற்றொரு பயனாளி வெளியிட்ட பதிவில், "தூய்மை இந்தியா திட்டத்துக்கான உண்மையான தூதர் கிடைத்துவிட்டார்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications