கிளாஸ் ரூமில் ஏசி இருந்தால் செலவை யார் ஏற்கவேண்டும்? பெற்றோர்களா? பள்ளி நிர்வாகமா? ஹைகோர்ட் அதிரடி
டெல்லி: பள்ளிகளில் உள்ள வகுப்பறைகளில் ஏசி வசதி கொடுக்கப்படும் பட்சத்தில் அதற்கான கட்டணத்தை பெற்றோர்களே கொடுக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பள்ளியை தேர்வு செய்யும் போதே பெற்றோர்கள் இதை எல்லாம் மனதில் வைத்து தேர்வு செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால், மக்கள் மத்தியில் ஏசி பயன்பாடு அதிகரித்துவிட்டது. பொது போக்குவரத்தில் போனால் கூட ஏசி வசதி உள்ள கொண வாகனங்களில் பயணிக்கவே மக்கள் விருப்பப்படுகிறார்கள். அதேபோல, பொது நிகழ்ச்சி எதுவாக இருந்தாலும் கூட ஏசி ஹாலில் வைக்காவிட்டால் அங்கே போகவே யோசிக்கும் அளவுக்கு வெப்பத்தின் கொடூரம் அதிகமாக உள்ளது.

இப்படி எல்லா பக்கமும் ஏசி பயன்பாடு அதிகரித்துவிட்ட நிலையில், பள்ளிகளில் வகுப்பறைகளும் தற்போது ஏசி மயமாகி வருகின்றன. குறிப்பாக பெருநகரங்களில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் சிலவற்றில் இதுபோன்று ஏசி வசதி கொண்ட வகுப்பறைகள் ஒதுக்கப்படுகின்றன. அதேபோல, மாணவர்கள் வந்து செல்வதற்கு கூட ஏசி வசதி கொண்ட வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
எனினும், மாணவர்களிடம் லேப் கட்டணம், கல்வி கட்டணம் வசூலிப்பது போல டெல்லியில் உள்ள ஒரு தனியார் பள்ளி நிர்வாகம் ஏசி கட்டணமாக மாதம் ரூ. 2000 மாணவர்களிடம் வசூலித்தது. டெல்லியில் உள்ள தனியார் பள்ளி நிர்வாகத்தின் இந்த செயலுக்கு பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியில் தீர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த நிலையில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் பெற்றோர் ஒருவர், ஏசிகளுக்கு தனியாக கட்டணம் வசூலிபபதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுநல மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை தலைமை நீதிபதி மன்மோகன் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பள்ளிகளில் ஏசி வசதி கொடுக்கப்படும் பட்சத்தில் அதற்கான கட்டணத்தை பெற்றோர்களே கொடுக்க வேண்டும்.
லேப் வசதி, ஸ்மார்ட் வகுப்பறை ஆகியவற்றிற்கு தனியாக கட்டணம் செலுத்துவது போல ஏசிக்கும் தனியாக கட்டணம் செலுத்த வேண்டும். பள்ளியை தேர்வு செய்யும் போதே பெற்றோர்கள் இதை எல்லாம் மனதில் வைத்து தேர்வு செய்ய வேண்டும். ஏசிக்கான செலவை பள்ளி நிர்வாகத்தின் மீது மட்டும் சுமத்த முடியாது" என்றார்.
இதற்கிடையே, டெல்லி அரசின் கல்வி இயக்குனரம் இது தொடர்பாக கூறுகையில், "பள்ளி கல்வி இயக்குனரகத்திற்கும் இதுபோன்ற புகார்கள் வந்துள்ளன. இது தொடர்பாக அறிக்கை கோரப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பள்ளிகளில் இருந்தும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் விடுத்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications
