நட்புன்னா.. இதுதான்! வேலையைவிட்டுட்டு நண்பனுக்காக உதவ நடுரோட்டுக்கு வந்த சயின்டிஸ்ட்!
டெல்லி: அவசரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த உலகில், கை கொடுத்து உதவும் ஒரே உறவு நட்புதான். அப்படித்தான் ஜெர்மனியில் வேலை பார்த்து வந்தவர், தனது நண்பனுக்காக வேலையை விட்டு விட்டு வந்து, தனது காஸ்ட்லி காரில் பேக்கரி பொருட்களை விற்பனை செய்து வருகிறார்.
இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேரான நிலையில், அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அவதேஷ் என்கிற நபர், டெல்லியில் கார் டிக்கியில் வைத்து பேக்கரி பொருட்களை விற்பனை செய்து வந்திருக்கிறார். இதை பார்த்த மக்களுக்கு சந்தேகமாக இருந்திருக்கிறது. காரணம், பேக்கரி பொருட்களை விற்க இவர் பயன்படுத்தியது காஸ்ட்லி கார். ரூ.37 லட்சம் மதிப்பு கொண்ட காரை யாராவது பேக்கரி பொருட்களை விற்க பயன்படுத்துவார்களா? இவர் செய்திருக்கிறார். விசாரித்ததில் இவர் ஒரு விஞ்ஞானி என்றும், நண்பனின் பிசினஸுக்காக தனது வேலையை விட்டு விட்டு வந்திருக்கிறார் என்பதும் தெரிய வந்திருக்கிறது.
இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஜெர்மனியில் மருத்துவ ஆராய்ச்சி விஞ்ஞானியாக பணியாற்றி வந்திருக்கிறார். தற்போது வேலையில் ஒரு குட்டி பிரேக் எடுத்துக்கொண்டு இந்தியாவுக்கு வந்து, நண்பரின் பிசினஸுக்கு உதவி செய்து வருகிறார். 'சட்கரா ஆன் வீல்ஸ்' என்கிற பெயரில் தனது நண்பனுக்கு புதிய உணவகத் தொழிலை உருவாக்கி கொடுப்பதே தனது நோக்கம் என்று அவதேஷ் கூறியிருக்கிறார்.
5-6 மாதங்களில் இந்த தொழிலை நிலை நிறுத்திய பின்னர், அவர் மீண்டும் ஜெர்மன் சென்றுவிடுவார். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பரவலாக ஷேரான நிலையில், பலரும் இவரின் முயற்சியை பாராட்டியிருக்கின்றனர். "இப்படியான நண்பர்கள் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்" என்றும், "உண்மையான நட்பு இதுதான்" என்றும், "நல்லது செய்தால் நல்லதுதான் நடக்கும்" என்றும் பலரும் கமெண்ட் செய்திருக்கிறார்கள்.
பள்ளி காலத்தில் தொடங்கி, வேலை தேடுவது வரை, திருமணம், குடும்பம் என செட்டில் ஆகும் வரை நண்பர்கள்தான் உதவுகிறார்கள். ஒவ்வொருவரின் வளர்ச்சியிலும் நண்பர்கள் என்பவர்கள் மிக முக்கிய பங்காற்றுகிறார்கள். அந்த வகையில், அவதேஷின் முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. உங்களுக்கும் இதுபோன்ற நண்பர்கள் இருக்கிறார்களா? கமெண்ட்டில் சொல்லுங்கள்.












Click it and Unblock the Notifications