முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் அரவிந்த் கெஜ்ரிவால்! டெல்லி புதிய முதல்வராக அதிஷி மார்லெனா தேர்வு
டெல்லி: டெல்லி முதல்வர் பதவியில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ராஜினாமா செய்தார். இன்று மாலை டெல்லி துணை நிலை ஆளுநரை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலகல் கடிதத்தை வழங்கினார். அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமாவை தொடர்ந்து டெல்லியின் புதிய முதல்வராக அதிஷி பதவியேற்க உள்ளார். முன்னதாக இன்று டெல்லியில் நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் புதிய முதல்வராக அதிஷி மார்லெனா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால் ஜாமீன் நிபந்தனைகளாக முதல்வர் அலுவலகம் செல்லக் கூடாது; முதல்வர் கோப்புகளை கையாளக் கூடாது எனவும் அதிரடியாக உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். இதனால் முதல்வர் பதவியில் தொடர முடியாத நிலை கெஜ்ரிவாலுக்கு ஏற்பட்டது.

இதனையடுத்து டெல்லியில் நேற்று முன் தினம் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகளிடையே பேசிய கெஜ்ரிவால், செப்டம்பர் 17-ந் தேதி தாம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறேன். டெல்லி சட்டசபைக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரியில்தான் தேர்தல் நடைபெற வேண்டும். ஆனால் முன்கூட்டியே நவம்பரிலும் தேர்தல் நடத்த பரிந்துரைப்போம். அப்படி முன்கூட்டியே தேர்தல் நடைபெறாத நிலையில் புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்படுவார் என அதிரடியாக அறிவித்தார்.
இதனால் டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் இன்று காலை ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் புதிய முதல்வர் பதவிக்கு மூத்த அமைச்சர் அதிஷி மார்லெனா பெயரை அரவிந்த் கெஜ்ரிவால் முன்மொழிந்தார். இதனையடுத்து அதிஷி மார்லெனா ஒருமனதாக, புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து இன்று மாலை 5 மணியளவில் அரவிந்த் கெஜ்ரிவால் துணை நிலை ஆளுநரை சந்தித்தார். அப்போது தமது டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை அரவிந்த் கெஜ்ரிவால் ஆளுநரிடம் வழங்கினார். இதனை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிஷி மார்லெனா புதிய முதல்வராக பதவியேற்க உள்ளார்.
சட்டசபை தேர்தலை முன்கூட்டியே நடத்த கோரிக்கை விடுக்கப்படும். இதனை ஆளுநர் ஏற்க மறுக்கும் நிலையில் புதிய முதல்வர் அதிஷி மார்லெனா தேர்வு குறித்த முடிவு அவரிடம் தெரிவிக்கப்படும். இதன் பின்னர் புதிய முதல்வர் அதிஷி மார்லெனா தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு குறித்த விவரங்கள் வெளியாகும்.












Click it and Unblock the Notifications