நடிகை கங்கனா ரனாவத்துக்கு சிக்கல்.. பஞ்சாப் குறித்து சர்ச்சை கருத்து.. களத்தில் இறங்கிய எஸ்ஜிபிசி
டெல்லி: பஞ்சாபில் தீவிரவாதம் தலைதூக்குகிறது என்று நடிகை கங்கனா ரனாவத் எம்பி கூறியதற்கு ஷிரோமணி குருத்வாரா பர்பந்தக் கமிட்டி (SGPC) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கங்கனா ரனாவத்தின் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று அந்த கமிட்டி தெரிவித்துள்ளது. அரசியல் அழுத்தம் இல்லாமல் விசாரணை நடக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
அண்மையில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் நடிகை கங்கனா ரணாவத், இமாசல பிரதேசம் மாநிலம் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டார். அங்கு வெற்றி பெற்ற கங்கனா ரணாவத் டெல்லி செல்வதற்காக கங்கனா ரணாவத் நேற்று சண்டிகார் விமான நிலையத்துக்கு சென்றுள்ளார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையின் (சி.ஐ.எஸ்.எப்) பெண் காவலர் குல்வீந்தர் கவுர், கங்கனாவை நோக்கி வேகமாக சென்றிருக்கிறார். பின்னர் அந்த பெண் காவலர் கங்கனாவின் கன்னத்தில் 'பளார்' என அறைந்தார். இதனை சற்றும் எதிர்பாராத கங்கனா அதிர்ச்சியில் உறைந்து நின்றார்.

இதை கண்ட அவரது உதவியாளர்கள் மற்றும் விமான நிலையத்தில் பாதுகாப்பு படையினர் அந்த பெண் காவலரை அங்கிருந்து அழைத்து சென்றனர். இதனால் சண்டிகர் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கு பின்னர் கங்கனா விமானம் ஏறி டெல்லி புறப்பட்டு சென்றார். பின்னர் விமான நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து கங்கனா சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அதில் கங்கனா ரணாவத் கூறுகையில், நான் இப்போது நன்றாக இருக்கிறேன். சண்டிகர் விமான நிலையத்தில் நடைபெற்ற பாதுகாப்பு சோதனையில் அந்த சம்பவம் நடந்தது. நான் விமான நிலையத்தில் பயணிகளுக்கான சோதனை முடிந்த பின், செல்லும்போது அந்த பெண் காவலர் வேறு ஒரு கேபினில் அமர்ந்திருந்தார். நான் அவரைக் கடந்து செல்ல முயன்ற போது, திடீரென அவர் என் கன்னத்தில் பளார் என அறைந்தார். பின்பு என்னை ஆபாசமாக திட்டினார். ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறீர்கள்? என்று அவரிடம் கேட்டபோது, விவசாயிகளின் போராட்டத்துக்காக இப்படி செய்தேன் என்று என்னிடம் கூறினார். பஞ்சாபில் பயங்கரவாதம் அதிகரித்து வருவதும், இதை எப்படி கையாள்வது என்பதும் தான் எனக்கு பெரும் கவலை அளிக்கிறது" இவ்வாறு கங்கனா கூறினார்.
இந்த நிலையில் சண்டிகார் விமான நிலையத்தில் கங்கனா ரணாவத் கன்னத்தில் அறைந்த பெண் காவலர் தொடர்பான வீடியோ காட்சிகள் வேகமாக பரவியது. இதற்கிடையே கங்கனாவை அறைந்த பெண் காவலர் குல்வீந்தர் கவுர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சி.ஐ.எஸ்.எப் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
இதற்கிடையே கங்கனாவை அறைந்தது ஏன் என பெண் காவலர் குல்வீந்தர் கவுர் கூறும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது,
அதில் அவர் "ரூ.100 அல்லது ரூ.200 கொடுக்கப்பட்டதால் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்துவதாக கங்கனா கூறினார். டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளில் என் அம்மாவும் ஒருவர் என்றார். டெல்லியில் போராடிய விவசாயிகளை பயங்கரவாதிகளாக சித்தரித்த காரணத்தால் கோபத்தில் காவலர் குல்வீந்தர் கவுர் , நடிகை கங்கனாவை அறைந்த விவகாரத்தில், பஞ்சாப் அமைப்புகள் காவலருக்கு ஆதரவாக களம் இறங்கி உள்ளன.
பஞ்சாப்பில் உள்ள மிகவும் பிரபலமான ஷிரோமணி குருத்வாரா பர்பந்தக் கமிட்டி (SGPC), பஞ்சாபில் தீவிரவாதம் தலைதூக்குகிறது என்று நடிகை கங்கனா ரனாவத் எம்பி கூறியதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த கருத்தை ஏற்கவே முடியாத ஆட்சேபனைக்குரியவை என்று குறிப்பிட்டுள்ளது. ஷிரோமணி குருத்வாரா பர்பந்தக் கமிட்டி என்பது இந்தியாவில் உள்ள குருத்வாராக்களை நிர்வகிப்பதற்கு பொறுப்பான ஒரு அமைப்பாகும்.
இந்த ஷிரோமணி குருத்வாரா பர்பந்தக் கமிட்டி தலைவர் ஹர்ஜிந்தர் சிங் தாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில், "சண்டிகர் விமான நிலையத்தில் மத்திய தொழிற்பாதுகாப்பு படையில் பணியாற்றும் பஞ்சாபி மாநில பாதுகாப்பு அதிகாரியுடன் வாக்குவாதத்திற்குப் பிறகு கங்கனா பஞ்சாபியர்களுக்கு எதிராக வெறுக்கத்தக்க கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளார். இது கங்கனாவின் பஞ்சாப் எதிர்ப்பு மனநிலையின் வெளிப்பாடு. இது கங்கனாவின் மனவெறுப்பு நோயை காட்டுகிறது. அதே சமயம் உண்மை என்னவென்றால் பயங்கரவாதம் கங்கனாவின் பேச்சால் தான் பரவுகிறது.
சண்டிகர் விமான நிலையத்தில் என்ன நடந்தது என்பது குறித்தும், சிஐஎஸ்எஃப் பெண் காவலரிடம் ஆட்சேபனைக்குரிய வகையில் ரனாவத் ஏதாவது சொன்னாரா என்பது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் .இந்த விவாகரத்தில் அநீதி இழைக்கப்படாமல் இருக்க, சிஐஎஸ்எஃப் நடத்தும் விசாரணை எந்த அரசியல் அல்லது தனிப்பட்ட செல்வாக்கும் இல்லாமல் செய்யப்பட வேண்டும்" என்று ஹர்ஜிந்தர் சிங் தாமி அறிக்கையில் கூறினார். 'எமர்ஜென்சி' படத்தில் இந்திரா காந்தியாக கங்கனா ரணாவத் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications