அணுசக்தி துறையில் தனியார் பங்களிப்பு.. வெளிநாட்டு முதலீட்டிற்கும் கிரீன் சிக்னல்.. "சாந்தி மசோதா!"
டெல்லி: இப்போது நடந்து வரும் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் மத்திய அரசு பல முக்கிய மசோதாக்களைக் கொண்டு வருகிறது. அதன்படி அணுசக்தித் துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், லோக்சபாவில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
நாடாளுமன்றத்தில் இப்போது குளிர்காலக் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. மகாத்மா காந்தி வேலைவாய்ப்புத் திட்டத்திற்குப் பதிலாக மத்திய அரசு விபி-ஜி ராம் ஜி என்ற திட்டத்தை முன்மொழிந்துள்ள நிலையில், இது தொடர்பான விவாதம் தீவிரமாக நடந்து வருகிறது. அதேநேரம் மத்திய அரசு இதர மசோதாக்களையும் கொண்டு வந்துள்ளது.

சாந்தி மசோதா
அப்படி மத்திய அரசு கொண்டு வந்த மசோதாக்களில் ஒன்று தான் அணுசக்தித் துறையில் தனியார் பங்களிப்புக்கு அனுமதி அளிக்கும் மசோதா. Sustainable Harnessing and Advancement of Nuclear Energy for Transforming India, அதாவது சாந்தி என்று இந்த மசோதா அழைக்கப்படுகிறது. நேற்று புதன்கிழமை சாந்தி மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. 2047ம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட் அணுசக்தி மின்சார உற்பத்தி என்ற இலக்கை எட்ட இது உதவும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தினார்.
நிறைவேற்றம்
தற்போது வரை அணுசக்தித் துறையில் மத்திய அரசு மட்டுமே இருக்கிறது. இதில் தனியார் பங்களிப்பை அனுமதிப்பதே இதன் பிரதான நோக்கமாகும். இருப்பினும், இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அணுசக்தி சேதத்திற்கான சிவில் பொறுப்பு சட்டம், 2010இன் விதிகளை இந்த மசோதா நீர்த்துப் போகச் செய்வதாக எதிர்க்கட்சிகள் வாதிட்டன. இந்த மசோதாவைக் கண்டித்து வெளிநடப்பும் செய்தனர். இந்தச் சூழலில் தான் இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. அடுத்து இந்த மசோதா ராஜ்யசபாவுக்கு அனுப்பப்படுகிறது.
என்ன நடக்கும்
அணுசக்தி உற்பத்தி, பயன்பாடு, கட்டுப்பாடு மற்றும் விரிவாக்கம் ஆகியவற்றுக்கான ஒருங்கிணைந்த சட்டம் இதன் மூலம் உருவாக்கப்படுகிறது. உரிமம் வழங்குதல், பாதுகாப்பு அனுமதி, பொறுப்பு, இழப்பீடு, ஒழுங்குமுறை மற்றும் மேற்பார்வை ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு ஒருங்கிணைந்த கட்டமைப்பு இதன் மூலம் உருவாக்கப்படும்.
இந்த மசோதாவின்படி, அணுசக்தி மையங்களை அமைக்க அரசுத் துறைகள், அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், அனுமதிக்கப்பட்ட தனிநபர்களுக்கு அனுமதி வழங்கப்படும். அதேநேரம் இதற்குத் தேவையான உரிமங்கள் கட்டாயம் பெற வேண்டும்.
மேலும், இந்தச் சட்டத்தின் கீழ் அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் (AERB) நிறுவப்படும். பாதுகாப்பு விதிகளை உருவாக்குவது, கதிர்வீச்சு பாதிப்பைக் கட்டுப்படுத்துவது, ஆய்வுகள் மேற்கொள்வது, அணுசக்தி மற்றும் கதிர்வீச்சு நிலையங்கள் விதிகளைப் பின்பற்றுவதைச் சரிபார்ப்பது ஆகியவை இந்த வாரியத்தின் முக்கியப் பணிகளாகும். விதிமீறல் கண்டறியப்பட்டால் ஆய்வு செய்து, விசாரணை நடத்தி தேவையான நடவடிக்கை எடுக்கவும் இந்த வாரியத்திற்கு அதிகாரம் தரப்படும்.
வெளிநாட்டு முதலீடுகள்
மேலும், இந்த மசோதாவின் கீழ் வெளிநாட்டு முதலீடுகளுக்கும் அனுமதி தரப்படும். சில குறிப்பிட்ட அணுசக்தி திட்டங்களில் வெளிநாட்டு அமைப்புகள் அல்லது நிறுவனங்கள் 49% வரை முதலீடு செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அணுசக்தி உற்பத்தியை வரும் காலங்களில் வேகமாக அதிகரிக்க இந்த மசோதா உதவும் என ஆளும் தரப்பு கூறுகிறது.












Click it and Unblock the Notifications