பிரதமர் மோடியை சந்தித்த விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா.. பிரதமருக்கு கொடுத்த ஸ்பெஷல் பரிசு!
டெல்லி: சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று திரும்பிய இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து உரையாடியுள்ளார்.
அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து பால்கன்-9 ராக்கெட் மூலம் விண்வெளிக்கு சென்ற சுபான்ஷு சுக்லா, 18 நாட்கள் அங்கு தங்கியிருந்து ஆய்வு பணிகளில் ஈடுபட்டார்.

நாசா மற்றும் இஸ்ரோ ஆதரவுடன் உருவாக்கப்பட்ட அமெரிக்காவின் ஆக்சியம்-4 திட்டத்தில் இந்திய விண்வெளி வீரரும் விமானப்படை கேப்டனுமான சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட குழுவினர் ஜூன் மாதம் 25 ஆம் தேதி அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து ஸ்பேஸ் எக்ஸின் பால்கன்-9 ராக்கெட் மூலம் விண்வெளிக்கு புறப்பட்டனர். சுபான்ஷூ சுக்லா குழுவினர் 18 நாட்கள் தங்கியிருந்து ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டனர்.
18 நாள் பயணத்தில் பல்வேறு ஆய்வுகளை செய்த சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட ஆக்சியம்-4 குழுவினர் ஜூலை 15 ஆம் தேதி கலிஃபோர்னியா கடல் பகுதியில் வந்திறங்கினர். இதைத்தொடர்ந்து, கடந்த சில வாரங்களாக அமெரிக்காவில் விண்வெளி தொடர்பான பயிற்சிகளை பெற்ற சுபான்ஷு சுக்லா நேற்று அதிகாலை விமானம் மூலம் இந்தியா திரும்பினார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
விண்வெளிக்கு சென்ற 2ஆவது இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார் சுபான்ஷூ சுக்லா. தற்போதைய இந்த விண்வெளி நிலையத்திற்கு சென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார். இந்நிலையில், சுபான்ஷூ சுக்லா இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து உள்ளார்.
சுபான்ஷு சுக்லாவுக்கு பிரதமர் மோடி, கட்டியணைத்து, கைகுலுக்கி பாராட்டு தெரிவித்துள்ளார். தனது விண்வெளி பயண அனுபவங்கள் குறித்து பிரதமர் மோடியிடம் விளக்கினார் சுபான்ஷூ சுக்லா. தனது வரலாற்று சிறப்புமிக்க விண்வெளிப் பயணத்தின் போது சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு தான் எடுத்துச் சென்ற இந்திய தேசியக் கொடியை பிரதமருக்கு வழங்கினார் சுபான்ஷு சுக்லா.
டெல்லியில் வரும் ஆகஸ்ட் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் தேசிய விண்வெளி தின கொண்டாட்டங்களில் சுபான்ஷு சுக்லா பங்கேற்க உள்ளார்.












Click it and Unblock the Notifications