“நேரு காலத்துல”.. 1950களில் 12 லட்சத்தையும் தற்போதைய 12 லட்சத்தையும் ஒப்பிட்டுப் பேசிய பிரதமர் மோடி!
டெல்லி: 1950களில் ரூபாய் 12 லட்சத்தையும் தற்போதைய காலகட்டத்தின் ரூபாய் 12 லட்சத்தையும் ஒப்பிட்டு பிரதமர் மோடி தேர்தல் பரப்புரையில் பேசியுள்ளார். மறைந்த முன்னாள் பிரதமர் நேரு ஆட்சி காலத்தைச் சுட்டிக்காட்டி பிரதமர் மோடி பேசி இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சம்பளம் பெறும் வரி செலுத்துவோருக்கான வருமான வரி விலக்கு உச்ச வரம்பை ரூபாய் 12 லட்சமாக அதிகரித்து அறிவித்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி கடந்த காலங்களில் காங்கிரஸ் ஆட்சியில் அதிக வரிச்சுமை இருந்ததாக குற்றம்சாட்டிப் பேசியுள்ளார்.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி நேற்று, டெல்லியில் உள்ள ஆர்.கே. புரத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்வு குறித்துப் பேசினார்.
பிரதமர் மோடி பேசுகையில், "இந்தபட்ஜெட் மக்களுக்கான பட்ஜெட். இந்த பட்ஜெட் நடுத்தர வர்க்கத்தினருக்கு பயனளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாஜக நடுத்தர வர்க்கத்தினர், நேர்மையாக வரி செலுத்துபவர்களை மதிக்கும் கட்சி. புதிய பட்ஜெட்டின் மூலம், நடுத்தர வர்க்கத்தினர் அவர்களின் அன்றாட தேவைக்கான அத்தியவசிய பொருட்களை வாங்குவது எளிதாக இருக்கும்.
நேரு ஆட்சி காலத்தில் நீங்கள் ரூ.12 லட்சம் சம்பாதித்திருந்தால், அதில் நான்கில் ஒரு பங்கை அரசுக்கு வரியாக செலுத்த வேண்டி இருந்திருக்கும். இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் நீங்கள் ஆண்டுக்கு ரூ.12 லட்சம் சம்பாதித்தால் அதில் 10 லட்சம் ரூபாயை வரி ஆக கட்டியிருப்பீர்கள். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ரூ.12 லட்சம் சம்பாதித்தால் ரூ. 2,60,000 வரி கட்ட வேண்டியிருக்கும்.
ஆனால், பாஜக அரசின் இந்த புதிய பட்ஜெட்டுக்கு பிறகு, ஒரு வருடத்தில் ரூ.12 லட்சம் சம்பாதிக்கும் ஒருவர் ஒரு ரூபாய் கூட வரி கட்ட வேண்டியதில்லை. நடுத்தர வர்க்க மக்களுக்கான பட்ஜெட் இது. காங்கிரஸ் கட்சி தங்களின் சொந்த கஜானாவை வரிப் பணத்தால் நிரப்ப நினைத்தது. ஆனால் பாஜக மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அக்கறை காட்டியுள்ளது.
இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் திட்டத்துக்கு நமது நாட்டின் இளைஞர்கள் நமக்குத் தேவை. அதனால்தான், அவர்களுக்காக அதிகளவில் இந்த பட்ஜெட்டில், நிதி ஒதுக்கி வேலைவாய்ப்புகளைக் கொண்டுவர முயற்சித்துள்ளோம். முதன்முறையாக வேலையில் இணைந்துள்ள இளைஞர்களுக்கு இந்த வரிச் சலுகை பயனுள்ளதாக அமையும்." எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய பிரதமர் மோடி, "கடந்த 11 ஆண்டுகளில் ஆத் ஆத்மி அரசு டெல்லியை சீரழித்துவிட்டது. இந்த முறை டெல்லி மக்கள் அனைவரும் பாஜகவுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்." எனத் தெரிவித்தார்.
1950களில் ரூபாய் 12 லட்சத்தையும் தற்போதைய காலகட்டத்தின் ரூபாய் 12 லட்சத்தையும் ஒப்பிட்டு பிரதமர் மோடி தேர்தல் பரப்புரையில் பேசியுள்ளார். மறைந்த முன்னாள் பிரதமர் நேரு ஆட்சி காலத்தைச் சுட்டிக்காட்டி பிரதமர் மோடி பேசி இருப்பது சமூக வலைதளங்களில் விவாதத்திற்கு உள்ளாகி வருகிறது.
ஊதியம் பெறும் வரி செலுத்துவோரின் வருமான வரியில் பெரும் குறைப்பு நடுத்தர வர்க்கத்தினரிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் மூலம் பணப் புழக்கம் அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஆனால் பணவீக்கம் ஏற்படக்கூடும் எனச் சிலர் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications