"களத்தில் சோனியா காந்தி.." பெங்களூர் எதிர்க்கட்சிகள் மீட்டிங்கில் சம்பவம்.. இதை யாருமே எதிர்பார்க்கல
டெல்லி: நாடு முழுக்க எதிர்க்கட்சிகளை ஒரே அணியில் ஒருங்கிணைக்கும் முயற்சிகள் நடந்து வரும் நிலையில், பெங்களூரில் வரும் ஜூலை 17, 18 தேதிகளில் நடக்கும் கூட்டம் குறித்து சில முக்கிய தகவல்களைக் கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருக்கும் நிலையில், பாஜகவை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே அணியில் திரள வேண்டும் என்றே பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
ஒரே அணியில் இணைந்து தேர்தலை எதிர்கொண்டால் மட்டுமே பாஜகவை வீழ்த்த முடியும் என்பதால் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே அணியில் போட்டியிட வேண்டும் என்பது அவர்கள் வாதமாக இருக்கிறது.

எதிர்க்கட்சிகள் கூட்டம்: பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் உறுதியாக இருந்தாலும் கூட கருத்து வேறுபாடுகளால் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே அணியில் இன்னும் வரவில்லை. இதற்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. இந்த்ச சூழலில் தான் கடந்த ஜூன் 23ஆம் தேதி பாட்னாவில் எதிர்க்கட்சியினர் கூட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், திமுக எனப் பல முக்கிய கட்சித் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சி தலைவர்கள் முதல் கூட்டம் சிறப்பாக இருந்ததாகவும் அடுத்த கூட்டம் வரும் ஜூலை மாதத்தில் நடைபெறும் என அறிவித்தனர். இந்த இரண்டாவது கூட்டம் சிம்லாவில் நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மழை காரணமாகப் பின்னர் அது பெங்களூருக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையே கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் இது தொடர்பாக சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
அவர் கூறுகையில், "ராகுல் காந்தியைத் தகுதி நீக்கம் செய்ததைக் கண்டித்து, வரும் ஜூலை 12ஆம் தேதி காங்கிரஸ் கட்சி சார்பில் மவுனப் போராட்டம் நடைபெறும். அதைத் தொடர்ந்து ஏற்கனவே அறிவித்தபடி ஜூலை 17 மற்றும் 18 தேதிகளில் பெங்களூரில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் வர உள்ளனர்.
சோனியா காந்தி: இந்தக் கூட்டத்தில் சோனியா காந்தி பங்கேற்க வேண்டும் என்று மல்லிகார்ஜுன் கார்கே கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கிடையே இந்தக் கூட்டத்தில் சோனியா காந்தி கலந்து கொள்ள உள்ளதாக எங்களுக்கு இப்போது தகவல் கிடைத்துள்ளது. இந்த நாட்டை மாற்ற முன்னெடுக்கும் இந்த மாபெரும் இயக்கத்தில் இணைய விரும்பும் அனைத்து தலைவர்களையும் வரவேற்கிறோம்" என்று அவர் தெரிவித்தார்.
கர்நாடகாவில் பெற்ற வெற்றி காங்கிரஸ் கட்சிக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ள நிலையில், அடுத்தடுத்த தேர்தலை உற்சாகமாக எதிர்கொள்ள ரெடியாகி வருகிறது. இதற்கிடையே எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் நேரடியாகச் சோனியா காந்தி பங்கேற்பது அக்கட்சி தொண்டர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
போராட்டம்: தொடர்ந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் குறித்துப் பேசிய அவர், "நீதிமன்ற தீர்ப்பு குறித்து நான் பேச விரும்பவில்லை. இருப்பினும், ராகுல் காந்திக்கு எதிராக இங்கே அரசியல் சதி நடக்கிறது. இது அனைவருக்கும் தெரியும். இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். ராகுல் காந்திக்கு ஆதரவாகப் பெங்களூரில் வரும் ஜூலை 12ஆம் தேதி சுதந்திர பூங்காவில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வாயில் கருப்பு துணியை வைத்து மவுன போராட்டம் நடத்த உள்ளோம்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications