டெல்லியில் எஸ்பி வேலுமணி.. திடீரென நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு.. என்ன நடந்தது?
டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி சந்திப்பு நடத்தியுள்ளார். இந்த சந்திப்பின் போது அதிமுக எம்பிக்களான சிவி சண்முகம் மற்றும் தனபால் ஆகியோர் உடனிருக்கின்றனர். இதனால் எஸ்பி வேலுமணி திடீரென நிர்மலா சீதாராமனை சந்திக்க என்ன காரணம் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், அதிமுக - பாஜக இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம் அடைந்து வருகிறது. முதற்கட்டமாக எடப்பாடி பழனிசாமியுடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டா நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. எடப்பாடி பழனிசாமியின் பேச்சால் பாஜக தலைமை அதிருப்தி அடைந்திருக்கிறது.

இதனால் எடப்பாடி பழனிசாமியுடன் 2019 மற்றும் 2021 ஆகிய தேர்தல்களில் பேச்சுவார்த்தை நடத்திய மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக டெல்லி தலைமை நியமனம் செய்துள்ளது. பாஜக தரப்பில் 55 தொகுதிகள் வரை கேட்பதாகவும், குறைந்தது 40 தொகுதிகளில் போட்டியிட பாஜக தலைமை விரும்புவதாக சொல்லப்பட்டன.
ஆனால் எடப்பாடி பழனிசாமியோ 28 முதல் 30 தொகுதிகள் வரை மட்டுமே ஒதுக்கப்படும் என்று கூறுவதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இதனால் எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்த டிசம்பர் 23ஆம் தேதி மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வரவுள்ளார். இந்த நிலையில் திடீரென அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி டெல்லி பயணித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளார்.
இதன் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. இந்த சந்திப்பின் போது அதிமுக ராஜ்ய சபா எம்பிக்களான சிவி சண்முகம் மற்றும் தனபால் ஆகியோரும் உடனிருந்தனர். இந்த சந்திப்புக்கான காரணம் என்ன என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்று செங்கோட்டையனும் டெல்லி பயணித்து நிர்மலா சீதாராமனை அவ்வப்போது சந்தித்து வந்தார்.
தற்போது எஸ்பி வேலுமணி திடீரென டெல்லி சென்று நிர்மலா சீதாராமனை சந்தித்திருக்கிறார். ஏற்கனவே கோவையில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வந்த போதும், எஸ்பி வேலுமணி அவரை சந்தித்திருந்தார். இதனால் இந்த சந்திப்புக்கான காரணம் என்ன என்ற விவாதம் தொடங்கி இருக்கிறது.












Click it and Unblock the Notifications