தீவு விவகாரம்..வங்கக் கடலில் 'சம்பவம்' செய்ய முயன்ற அமெரிக்கா- தடுத்ததால் பதவியை இழந்த ஷேக் ஹசீனா!
டெல்லி: வங்கதேசத்துக்கு சொந்தமான வங்கக் கடலில் உள்ள செயின்ட் மார்ட்டின் தீவை தம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என அமெரிக்கா கொடுத்த நெருக்கடியை அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நிராகரித்திருக்கிறார். அமெரிக்காவுக்கு எதிரான இந்த நடவடிக்கையால்தான் தம்மை பிரதமர் பதவியில் இருந்து விலகச் செய்து நாட்டை விட்டு வெளியேற்றியதாக ஷேக் ஹசீனா தெரிவித்திருப்பது மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
தெற்காசியாவில் காலூன்றுவது என்பது அமெரிக்காவின் பன்னெடுங்கால கனவு. ஆனால் தெற்காசியாவில் இந்தியாவை மீறி எந்த ஒரு நாடும் அமெரிக்காவுக்கு சிவப்பு கம்பளம் விரிக்க தயாராக இல்லை. இன்னொரு பக்கம், இந்தியாவை சுற்றிய அண்டை நாடுகள் அனைத்தையும் கடனுதவிகள் உள்ளிட்டவைகளின் பெயரால் சீனாவும் வளைத்துப் போட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

இந்த நிலையில் வங்கதேசத்தில் மாணவர் புரட்சியின் காரணமாக பிரதமர் பதவியை ராஜினாமா செய்த கையோடு இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார் ஷேக் ஹசீனா. அவரது பதவி விலகல் தொடர்பாக வெளியாகி வரும் தகவல்களில் மிக முக்கியமானது செயின்ட் மார்ட்டின் தீவு விவகாரம். இந்த தீவு வங்கக் கடலில் இருக்கிறது. தென்னைமரத் தீவு என்றும் பவளப்பாறைகள் தீவும் என்றும் கொண்டாடப்படுகிறது செயின்ட் மார்ட்டின் தீவு. இந்தத் தீவுக்குதான் அமெரிக்கா குறி வைத்ததாம்.
செயின் மார்ட்டின் தீவை எப்படியாவது வங்கதேசத்திடம் இருந்து கையகப்படுத்திக் கொண்டால் வங்காள விரிகுடாவில் நின்று இந்தியாவை அச்சுறுத்திவிட முடியும் என்பது அமெரிக்காவின் திட்டம். ஆனால் அமெரிக்காவின் இந்த நாசகார திட்டத்துக்கு ஷேக் ஹசீனா ஒருபோதும் இடம்தரவில்லையாம். இந்தியாதான் வங்கதேச விடுதலையைப் பெற்றுக் கொடுத்தது; இந்தியாதான் ஷேக் ஹசீனாவுக்கு ஏற்கனவே அடைக்கலம் கொடுத்தது; இந்தியாவின் வங்கதேச முகமாக இருப்பதும் ஷேக் ஹசீனாதான். அவரிடமே அமெரிக்கா இந்த தீவு விவகாரத்தை முன்வைத்து பேரம் பேசிப் பார்த்திருக்கிறது. ஷேக் ஹசீனாவோ இந்தியாவுக்கு எதிராக துரோகம் செய்யவே முடியாது என மறுத்துவிட்டிருக்கிறார்.
இந்த கோபத்தில்தான் அமெரிக்கா தன் பங்குக்கு ஷேக் ஹசீனாவுக்கு எதிரான உள்நாட்டுப் புரட்சியை பாகிஸ்தானுடன் இணைந்து நடத்திக் கொண்டிருக்கிறதாம். இதனை ஷேக் ஹசீனாவே பகிரங்கமாக கூறியிருப்பதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications