மனைவி இல்லை.. 2 வயது குழந்தையோடு டெலிவரி செய்த ஜோமேட்டோ ஊழியர்.. ஸ்டார்பக்ஸ் மேனேஜர் தந்த கிப்ட்
டெல்லி: மனைவி இல்லாத காரணத்தினால் 2 வயது மகளை தோளில் சுமந்தபடியே ஜோமேட்டோ ஊழியர் உணவு டெலிவரி செய்து வருகிறார். இவர் தனது குழந்தையுடன் ஆர்டர் எடுக்க ஸ்டார்பக்ஸ் கிளைக்கு சென்ற நிலையில் அங்குள்ள மேனேஜர் செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது நாம் அனைவரும் இருந்த இடத்தில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் விரும்பிய ஹோட்டல்களில் உணவுகளை ஆர்டர் செய்து சுவைத்து வருகிறோம். நாம் ஆர்டர் செய்யும் செல்போன் செயலியின் நிறுவனத்தின் டெலிவரி பாய்கள் நம் வீட்டுக்கே உணவை கொண்டு வந்து தருகிறார்கள்.

இத்தகைய சூழலில் தான் டெலிவரி பாய்கள் குறித்த பல்வேறு தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. குறிப்பாக சமீபத்தில் மாற்றுத்திறனாளி ஒருவர் தனது மூன்று சக்கர வாகனங்களில் உணவு டெலிவரி செய்தது, டெல்லியில் இளைஞர் ஒருவர் சைக்கிளில் உணவு டெலிவரி செய்தது தொடர்பான போட்டோக்கள் வெளியாகி இணையத்தை கலக்கின.
மேலும் மழையை பொருத்தப்படுத்தாமல் டெலிவரி பாய்கள் நேரத்துக்கு உணவை கொண்டு சேர்ப்பது, கஷ்டப்பட்டு வரும் டெலிவரி பாய்களுக்கு வாடிக்கையாளர்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்வதை நாம் கேட்டு இருப்போம். அதுமட்டுமின்றி படிப்புக்கு நடுவே இரவு, அதிகாலை வேளைகளில் சிலர் டெலிவரி வேலைகளை செய்து பணம் சம்பாதித்து வருகின்றனர். இப்படி டெலிவரி பாய்களிடம் நாம் விசாரித்தால் நெஞ்சை நொறுக்கும் அல்லது உத்வேகம் அளிக்கும் பல கதைகள் நமக்கு கிடைக்கும்.
அந்த வகையில் தான் தற்போது இன்னொரு டெலிவரி பாய் தொடர்பான போட்டோ இணையதளங்களில் வெளியாகி கவனத்தை பெற்றுள்ளது. அந்த போட்டோவில் ஜோமேட்டோ நிறுவனத்தின் டெலிவரி பாய் ஒருவர் கையில் குழந்தையை சுமந்தபடி நிற்கிறார். இதில் என்ன சிறப்பு இருக்கிறது? என்றால் அந்த டெலிவரி பாய் யார்? அந்த குழந்தை யார்? என்று கேட்டால் நீங்களும் நிச்சயம் பாராட்டுவீர்கள்.
இந்த டெலிவரி பாய் குழந்தையுடன் இருக்கும் போட்டோ என்பது Linkedin பக்கத்தில் முதல் முதலில் பதிவு செய்யப்பட்டது. இந்த பதிவை செய்தவர் டெல்லியின் கான் மார்க்கெட் பகுதியில் உள்ள ஸ்டார்பக்ஸ் கிளையின் மேலாளர் தேவந்திர மெஹ்ரா. இவர் அந்த ஜோமேட்டோ டெலிவரி பாய் குழந்தையை கையில் வைத்திருக்கும் போட்டோவை பகிர்ந்து அதன் பின்னணி பற்றி விவரித்துள்ளார்.
அந்த பதிவில், ‛‛டெல்லியில் உள்ள எங்களின் ஸ்டார்பக்ஸ் கிளைக்கு இன்று ஜோமேட்டோ டெலிவரி செய்யும் நபர் சோனு வந்தார். அவர் எங்களின் இதயங்களை வென்றார். ஏனென்றால் அவர் தனது கையில் 2 வயது குழந்தையுடன் வந்தார். குழந்தை யார் என்று கேட்டபோது அவர் தனது மகள் என்று கூறினார். அவருடன் மனைவி இல்லை. சிங்கிள் பேரண்ட்டாக அவர் தனது 2 வயது மகளை வளர்க்கிறார்.
இந்த வேளையில் பணிக்கு நடுவேயும் மகளை கையில் வைத்து கவனித்தபடி கடினமாக உழைக்கிறார். குழந்தையை பார்த்து கொண்டே உழைக்க வேண்டும் என்ற அவரது எண்ணம் எங்களை அதிகம் கவர்ந்தது. இதனால் அவருடன் இருந்த குழந்தைகளுக்கு எங்களின் நிறுவனம் சார்பில் பாலில் செய்யப்பட்ட பேபிசினோவை கிப்ட்டாக வழங்கி சோனுவை பாராட்டினோம்.
எங்களின் பேபிசினோவை வாங்கியதும் குழந்தையின் முகத்தில் சிறு புன்னகை வந்தது. இதில் நாங்கள் பெருமையடைகிறோம். மேலும் எத்தகைய கடினமான காலங்களிலும் கூட மகளை கைவிட அவரது தந்தைக்கும், அவரது குழந்தைக்கும் வாழ்த்து தெரிவித்தோம்'' என கூறியுள்ளார். இந்த பதிவை பார்த்த பலரும் ஜோமேட்டோ டெலிவரி பாய் சோனுவை பாராட்டி வருகின்றனர். மேலும் அந்த பதிவுக்கு பலரும் லைக்குகள் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications