மாநில நிதி உரிமை.. நிர்மலா சீதாராமனை விடாத பாஜகவினர்.. பட்ஜெட் ஆலோசனையில் வியந்து மகிழ்ந்த பிடிஆர்
டெல்லி: டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான மத்திய பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டம் நடந்தது. இதில் பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்கள் உள்பட கட்சி பாகுபாடு இன்றி தென்இந்தியா, வடஇந்தியா என்ற வித்தியாசம் இன்றி அனைத்து மாநிலங்களும், மாநிலத்துக்கான நிதி உரிமைகள் குறைந்து கொண்டே வருகிறது. இதை சீர்த்திருத்தம் வேண்டும் என குரல் கொடுத்தது மகிழ்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது என தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
ஒவ்வொரு மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக மத்திய நிதி அமைச்சர் மாநில நிதி அமைச்சர்களுடனும், பல்வேறு தொழில்துறையினருடன் ஆலோசனை நடத்துவது வழக்கமான ஒன்றாகும்.
அந்த வகையில் 2023-2024ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

நிர்மலா சீதாராமன் ஆலோசனை
இதனால் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை கூட்டத்தை துவங்கி உள்ளார். இந்த ஆலோசனை கூட்டம் கடந்த 21ம் தேதி துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் தொழில் துறையினர், தொழில் கூட்டமைப்பினர் உள்பட பல்வேறு துறை பிரதிநிகள் பங்கேற்று வருகின்றனர்.

நிதி அமைச்சர்களுடன் ஆலோசனை
இன்று டெல்லியில் நடந்த ஆலோசனையில் ஒவ்வொரு மாநில நிதி அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்தகூட்டத்தில் தமிழக அரசு சார்பில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் ஒவ்வொரு நிதி அமைச்சரும் தங்கள் மாநிலத்துக்கான கோரிக்கைகளை முன்வைத்தனர். இந்த கூட்டத்துக்கு பிறகு தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கட்சி பாகுபாடு இன்றி
இந்த கூட்டத்தில் கட்சிக்கு அப்பாற்பட்டு தென்இந்தியா, வடஇந்தியா என்ற வித்தியாசம் இன்றி அனைத்து மாநிலங்களும், மாநிலத்துக்கான நிதி உரிமைகள் குறைந்து கொண்டே வருகிறது என தெரிவித்தனர். இதை சீர்த்திருத்த வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மத்திய, மாநில அரசுகள் இணைந்த திட்டம், மத்திய-மாநில அரசின் நிதி பங்கீட்டு புள்ளிவிபரங்களை சுட்டிக்காட்டி ஆதாரங்களுடன் கோரிக்கைகள் வைக்கப்பட்டது.

மகிழ்ச்சி-ஆச்சரியம்
மேலும் மாநிலத்தின் நிதி ஆதாரத்தை திருப்பி நிலைநாட்ட வேண்டும் எனவும், வாஜ்பாய் ஆட்சியில் இருந்த நிலையை உருவாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இது மகிழ்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருக்கிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களை சேர்ந்த அமைச்சர்கள் கூறினார்கள்.

காலநீட்டிப்பு செய்ய..
மேலும் உலகளவில் பெரிய பொருளாதார நெருக்கடி வரக்கூடிய வாய்ப்பு உள்ள நிலையில் மாநிலத்தில் கடன் எல்லைகளையும், ஜிஎஸ்டி நிவாரணம் வழங்கும் காலத்தையும் 2 ஆண்டு நீட்டிப்பு செய்ய வேண்டும். 15வது நிதிக்குழுவின்படி பற்றாக்குறையை அடுத்த ஆண்டுக்குள் 3 சதவீதத்துக்குள் கொண்டு வர வேண்டும் என கூறப்பட்டது'' என்றார்.












Click it and Unblock the Notifications