இந்தியாவில் தொடர்ந்து வேகம் குறையும் தடுப்பூசி பணிகள்.. ஒரு வாரத்தில் மட்டும் 35% சரிவு
டெல்லி: கொரோனா தடுப்பூசிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு நாட்டில் தொடர்வதால், இந்தியாவில் ஒரே வாரத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் 35% வரை குறைந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால், 18+ அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இருப்பினும், தட்டுப்பாடு காரணமாகப் பல மாநிலங்களும் 18+ அனைவருக்கும் தடுப்பூசி பணிகளைத் தொடங்கவில்லை. தொடங்கிய சில மாநிலங்களிலும் பற்றாக்குறை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசி பணிகள்
இந்நிலையில், தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக, நாட்டில் தினசரி தடுப்பூசி போட்டு கொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. மே 23ஆம் தேதி, நாட்டிலுள்ள 10 லட்சம் பேரில் சராசரியாக 980 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது. இது கடந்த வாரம் 10 லட்சம் பேரில் 1455 பேர் என்று இருந்தது குறிப்பிடத்தக்கது. சர்வதேச அளவில் தற்போது தினமும் சராசரியாக 10 லட்சம் பேரில் 3564 பேருக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் நமக்கு ஆறுதல் அளிக்கும் ஒரு விஷயம் கொரோனா பாதிப்பு நாட்டில் குறைந்து வருவது மட்டும்தான்.

குறையும் கொரோனா
தொடர்ந்து 2 வாரங்களாக நாட்டில் கொரோனா கேஸ்கள் குறைந்து வருகிறது. மே 23 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் தினசரி கேஸ்கள் 22 சதவீதம் குறைந்துள்ளது. அதாவது இந்தியாவில் கடந்த மே 6ஆம் தேதி கொரோனா 2ஆம் அலை உச்சத்திலிருந்த போது தினசரி வைரஸ் பாதிப்பு 4.14 லட்சம் வரை சென்றது. கடந்த வாரம் 3.3 லட்சமாகக் குறைந்த வைரஸ் பரவஸ், இப்போது தினசரி வைரஸ் பாதிப்பு 2 லட்சமாகக் குறைந்துள்ளது. சுமார் 40 நாட்களுக்குப் பிறகு முதல் முறையாக, இன்று இந்தியாவில் 2 லட்சத்திற்கும் குறைவானவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

பற்றாக்குறை
அதேநேரம் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இந்தியாவில் தடுப்பூசி பற்றாக்குறை என்பது தொடர்ந்தே வருகிறது. இதனால் தடுப்பூசி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஒரே வாரத்தில் தடுப்பூசி செலுத்துபவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்திற்கு 1455 பேர் என்றிலிருந்து 980 என்று குறைந்துள்ளதே இதற்குச் சாட்சி. இது சுமார் 35% குறைவாகும்.

எப்போது சீராகும்
அதிலும், மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி ஆகிய மாநிலங்கள் தங்கள் மக்களில் அதிகப்படியான மக்களுக்குத் தடுப்பூசிகளைச் செலுத்தியுள்ளன.தடுப்பூசி பற்றாக்குறை சீராக குறைந்தது இன்னும் சில வாரங்களாவது ஆகும் என்பதால் வரும் காலங்களில் தடுப்பூசி பணிகள் மேலும் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications