குணமடைந்த பிறகும் துரத்தும் கொரோனா.. 6 மாதங்களுக்கு தொடரும் சிக்கல்கள்.. பட்டியலிடும் ஆய்வாளர்கள்
டெல்லி: கொரோனா வைரசில் இருந்து குணமடைந்த பின்னரும் 7% நோயாளிகளுக்கு சுமார் 4 முதல் 6 மாதங்களில் உளவியல் ரீதியான பாதிப்புகள் ஏற்படுவதாகச் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
கடந்த 1.5 ஆண்டுகளாகவே உலகை ஆட்டிப்படைத்துத் கொண்டிருப்பது கொரோனா தான். சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா, இன்று கிட்டதட்ட உலகின் அனைத்து நாடுகளுக்கும் பரவியுள்ளது.
உலகளவில் இதுவரை 22 கோடிக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல 46 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.

கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்பு
கொரோனா பரவ தொடங்கிப் பல மாதங்கள் ஆகியிருந்தாலும், இதற்கு நாம் தடுப்பூசி கண்டுபிடித்திருந்தாலும் கூட ஒப்பீட்டளவில் கொரோனா வைரஸ் என்பது புதிய வைரஸ் தான். கொரோனா குறித்து பல்வேறு விஷயங்கள் நமக்குத் தெரியாது. எனவே, இது குறித்த ஆய்வுகளும் சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, கொரோனாவால் ஏற்படும் நீண்டகால பாதிப்பு குறித்தும் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மனநல பிரச்சினைகள்
இந்நிலையில், கொரோனா நோயாளிகளில் சுமார் 7% பேருக்கு மனநலம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகச் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. மன அழுத்தம், பதற்றம் உள்ளிட்ட உளவியல் கோளாறுகள் கொரோனா நோயாளிகள் மத்தியில் அதிகம் ஏற்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானோருக்கு மனநல மருத்துவ வல்லுநரின் சிகிச்சை தேவைப்படும் அளவுக்குப் பாதிப்பு மோசமாக இருந்துள்ளதும் இதில் தெரிய வந்துள்ளது.

6 மாதங்களுக்குப் பின்னரும்
செவன்ஹில்ஸ் மருத்துவமனையில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை கொரோனாவால் அனுமதிக்கப்பட்ட 17,676 நோயாளிகள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 1,585 பேருக்கு மனநல பிரச்சனை சார்ந்த அறிகுறிகள் இருந்துள்ளது. மேலும், 1,233 பேர், அதாவது 7% பேருக்கு மனநல பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற மனநல பிரச்சினைகள் ஒருவர் கொரோனாவில் இருந்து குணமடைந்த பின்னர் 4 முதல் 6 மாதங்களுக்கு ஏற்படுவது இதில் தெரிய வந்துள்ளது.

சீன ஆய்வாளர்கள்
ஏற்கனவே, கொரோனாவால் பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தும் நிலையில், மனநலப் பிரச்சனைகள் ஏற்படுவது புது தலைவலியை ஏற்படுத்துகிறது. அதிலும் 6 மாதங்கள் வரை கொரோனாவுக்கு பிந்தைய மனநல பாதிப்பு என்பது மிகச் சிக்கல் தான். இதுபோல கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகள் குறித்து உலகெங்கும் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதில் குறிப்பாக, சீனாவின் வூஹான் நகரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் கடந்த மாதம் வெளியானது.

நோயெதிர்ப்பு சக்தி குறைவு
அதில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களில் மூன்றில் ஒருவருக்கு மூச்சு விடுவதில் சிரமம், நுரையீரல் பாதிப்பு ஆகியவை சுமார் ஓர் ஆண்டு வரை தொடர்ந்துள்ளது. குறிப்பாக, தீவிரமாக கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அதேபோல கொரோனாவில் இருந்து குணமடைந்தோருக்கு கொரோனாவால் பாதிக்கப்படாதவர்களுடன் ஒப்பிடுகையில் நோயெதிப்பு சக்தியும் குறைவாகவே உள்ளதும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பெண்களுக்கே வைரஸ் பாதிப்பு அதிகம்
இதுபோன்ற கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்பு ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்களுக்கே அதிகம் ஏற்பட்டுள்ளது. கவலை அல்லது மனச்சோர்வு போன்ற மனநலம் சார்ந்த பாதிப்புகள் ஆண்களுடன் ஒப்பிடுகையில் 2 மடங்கு அதிகமாகப் பெண்களுக்கு ஏற்படுவதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதேபோல நுரையீரல் பாதிப்பும் 3 மடங்கு அதிகமாகப் பெண்களுக்கு ஏற்படுவதாகச் சீன ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications