வயநாடு நிலச்சரிவு... பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடியிடம் அறிக்கை சமர்ப்பிப்பு
டெல்லி: கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவத்தில் ஏற்பட்ட பாதிப்புகள், மீட்புப் பணிகள், நிவாரணப் பணிகள் குறித்து பிரதமர் மோடியிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தைச் சேர்ந்தவரும், சிறுபான்மையினர் நலத் துறையின் மத்திய இணை அமைச்சருமான ஜார்ஜ் குரியன், பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து அறிக்கையை தாக்கல் செய்தார்.
வயநாடு மாவட்டத்தில் உள்ள கடந்த 29 ஆம் தேதி நள்ளிரவு 1 மணியளவில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து அதிபயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், முண்டக்கை, மேப்பாடி, சூரல்மலை, வைத்திரி, வெள்ளேரிமலை, பொத்துகலு உள்ளிட்ட கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகள் அடித்து செல்லப்பட்டன. நூற்றுக்கணக்கான மக்கள் மண்ணோடு மண்ணாகப் புதைந்தனர்.

சூரல்மலை - முண்டக்கை இடையேயான பாலம் உடைந்ததால் வெள்ளத்தைக் கடந்து ராணுவம், பேரிடர் மீட்புப் படையினரால் நிலச்சரிவு ஏற்பட்ட மலைக் கிராமங்களுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், சூரல்மலை, முண்டக்கையின் ஒரு பகுதியில் மட்டுமே மீட்புப் பணியில் ஈடுபட முடிந்தது. இதையடுத்து, ராணுவத்தினர் தற்காலிக பெய்லி பாலத்தை இரவு, பகலாக அமைத்து அவ்வழியாக மீட்பு வாகனங்களில் சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து, இன்று 6வது நாளாக மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வயநாட்டின் முண்டக்கை, சூரல்மலை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 350க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 150க்கும் மேற்பட்ட உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. காணாமல் போன 200க்கும் மேற்பட்டோரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேசிய பேரிடர் மீட்பு படையினர், ராணுவத்தினர் மீட்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். மலைப் பகுதிகளில் ராணுவத்தினர் ஹெலிகாப்டர், வாக்கி டாக்கி, ரேடார் மற்றும் மோப்பநாய்களின் உதவியுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று மீட்புப் பணிகளைப் பார்வையிட்டார். நிலச்சரிவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், மீட்புப் பணிகள், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிவாரணப் பணிகள், மத்திய மீட்புப் படை, ராணுவ வீரர்கள், மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், காவல் துறையினர் உள்ளிட்டோரின் மீட்பு நடவடிக்கைகள், நிவாரணம் ஆகியவை குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.












Click it and Unblock the Notifications