பொன்முடி விவகாரம்.. ஆளுநர் ரவி முடிவெடுக்காவிட்டால் உச்சநீதிமன்றம் இப்படி உத்தரவு பிறப்பிக்கும்?
டெல்லி: தமிழ்நாடு அமைச்சராக பொன்முடிக்கு மீண்டும் பதவி பிரமாணம் செய்து வைக்க தமிழ்நாடு ஆளுநர் ரவி மறுத்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி, கண்டனம், எச்சரிக்கையை வெளிப்படுத்தி இருக்கிறது. உச்சநீதிமன்றம் கெடு விதித்த நிலையிலும் ஆளுநர் ரவி முடிவெடுக்காவிட்டால் என்ன மாதிரியான உத்தரவு பிறப்பிக்கப்பட வாய்ப்புள்ளது என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தமிழ்நாடு அமைச்சராக இருந்த பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம். இதனால் எம்.எல்.ஏ. பதவி, அமைச்சர் பதவியை இழந்தார் பொன்முடி.

சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றமோ, பொன்முடிக்கு எதிரான தீர்ப்பை நிறுத்தி வைத்தது. இதனால் இயல்பாகவே பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ. வானார். இதனடிப்படையில் பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ரவிக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் இதனை ஆளுநர் ரவி ஏற்காதது பெரும் சர்ச்சையாகிவிட்டது.
பொன்முடிக்கு ஆளுநர் ரவி பதவி பிரமாணம் செய்து வைக்க மறுத்தது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச், ஆளுநர் ரவியை மிக கடுமையாக எச்சரித்தது. ஆளுநர் ரவிக்கு கடும் கண்டனமும் தெரிவித்தது. அத்துடன் பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பது தொடர்பாக நாளைக்குள் முடிவெடுக்கவும் கெடுவிதித்துள்ளது உச்சநீதிமன்றம். அப்படி முடிவெடுக்காவிட்டால் என்ன நடவடிக்கை எடுப்போம் என இப்போது சொல்ல முடியாது என்பதும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எச்சரித்திருக்கின்றனர்.
தற்போதைய நிலையில் ஆளுநர் ரவியின் முன்பு உள்ள வாய்ப்புகள் என்பது பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பதுதான். உச்சநீதிமன்றத்தின் கெடுவை மீறி ஆளுநர் முடிவெடுக்காமல் போனால் அப்போது நீதிபதிகள் எப்படியான உத்தரவை பிறப்பிக்கக் கூடும் என்பது குறித்து சமூக வலைதளங்களில் விவாதிக்கப்படுகிறது.
இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்த மூத்த பத்திரிகையாளர்கள், உச்சநீதிமன்றத்தின் கெடுவை ஆளுநர் மதிக்காத நிலையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிடக் கூடும். மாநிலத்தில் ஆளுநர் இல்லாத சூழலில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வசம் சில பொறுப்புகள் செல்லும் என்கிற அடிப்படையில் இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பிக்கலாம் என கூறப்படுகிறது. அப்படியான ஒரு உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்தால் ஆளுநர் ரவி பதவியில் நீடிப்பதற்கு கடும் நெருக்கடி உருவாகும் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications