"ஸ்டெர்லைட் ஆலையால் தான் பாதிப்பு என்பதற்கு ஆதாரமே இல்லை.." சுப்ரீம் கோர்டில் வேதாந்தா பரபர வாதம்
டெல்லி: தூத்துக்குடியில் வேதாந்தா ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி கோரிய மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை செய்தது.
தூத்துக்குடியில் உள்ள வேதாந்தா நிறுவனத்திற்குச் சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையால் அப்பகுதியைச் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு உடல்நிலை பாதிப்புகளை ஏற்படுவதாக அங்குள்ள மக்கள் தொடர்ந்து புகார் அளித்தனர்.
மேலும், இதற்காக அங்குள்ள மக்கள் தொடர்ச்சியாகப் போராட்டங்களையும் நடத்தினர். அதன் ஒரு பகுதியாகக் கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி போராட்டமும் ஊர்வலமும் நடைபெற்றது.
அப்போது பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடியில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் மாநிலத்தையே உலுக்கியது.

ஸ்டெர்லைட் ஆலை
இதன் பின்னர் ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமா மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், ஆலையை மீண்டும் திறக்க அனுமதி அளிக்க வேண்டும் எனக் கோரி கடந்த 2020ஆம் ஆண்டு வேதாந்தா லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மனு தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும், இந்த மனுவைச் சென்னை ஐகோர்ட் நிராகரித்தது. இந்நிலையில், இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

மேல்முறையீட்டு மனு
மேலும், கடந்த 2ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசுட் அமர்வில், வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என வேதாந்தா தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அப்போது, மேல்முறையீட்டு மனு மார்ச் 15 (இன்று) பட்டியலிடப்பட்டு உள்ளது என்றும் அன்றைய தினம் வழக்கைப் பட்டியலில் இருந்து நீக்காமல் நிச்சயம் விசாரணை செய்ய வேண்டும் என வேதாந்த நிறுவன தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். அதற்கு நீதிபதிகள் கண்டிப்பாக வழக்கு விசாரணை எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவித்திருந்தனர்.

ஸ்டெர்டலைட் வாதம்
அதன்படி இன்றைய தினம் இந்த வழக்கு நீதிபதிகள் டிஒய் சந்திரசூட், நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி விக்ரம்நாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வேதாந்தா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அரியமா சுந்தரம், இந்த ஆலை முதலில் மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரியில் தான் ஆலை அமைக்கப்பட இருந்தது என்றும் தொழில் சாலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மாநிலம் என்பதாலே தமிழகத்திற்கு இந்த ஆலை கொண்டு வரப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆதாரம் இல்லை
மேலும் ஆலையைச் சுற்றியுள்ள மக்கள் ஆலை வெளியேற்றும் பொருட்களால் தான் தங்கள் கண்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதாகச் சொன்னார்கள் என்ற அரியா சுந்தரம், அதன் பிறகு தான் ஆலை மூட தமிழக அரசு முடிவெடுத்தது என்றும் ஆனால் இதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாக எந்த ஆதாரமும் இல்லை என்றும் ஸ்டெர்லைட் ஆலையால் மாசுபாடு ஏற்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட பல்வேறு குழுக்களும் ஸ்டெர்லைட் ஆலையின் செயல்பாடு திருப்திகரமாக இருப்பதாகத் தெரிவித்தன என்றும் அவர் தெரிவித்தார். மேலும், ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபாடு அடைவதாக எந்த குழுவும் அறிக்கை தாக்கல் செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூடு
மேலும், ஆலை விரிவாக்கம் செய்ய முயன்ற போது பிரச்சனையானது என்று குறிப்பிட்ட அவர், ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சிலர் கல் வீச்சு உள்ளிட்ட வற்றில் ஈடுப்பாடார்கள், அதனால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்றும் நாங்கள் எந்த மாசையும் ஏற்படுத்தவில்லை என சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைப்படி தான் NGT ஆலையைத் திறக்க அனுமதி வழங்கியது என்றும் தெரிவித்தார். வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் மார்ச் 22ஆம் தேதிக்குத் தள்ளி வைத்தனர்.












Click it and Unblock the Notifications