கோவிஷீல்டு மரணம்.. வழக்கை ரத்து செய்ய மத்திய அரசு வலியுறுத்தல்! விசாரணையை ஒத்தி வைத்தது நீதிமன்றம்
டெல்லி: கொரோனா தொற்று காலத்தில் செலுத்தப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசி தங்களது மகளை கொன்றுவிட்டதாக இரண்டு பெற்றோர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி இருந்த நிலையில், வழக்கு விசாரணையை நவ.26ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்திருக்கிறது.
கொரோனா தொற்று காலத்தில் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். உயிர்பலியை தடுக்க விஞ்ஞானிகள் தீவிரமான ஆய்வை மேற்கொண்டு தடுப்பூசியை கண்டுபிடித்தனர். தடுப்பூசி வந்த பிறகு உயிர் பலி வெகுவாக குறைந்தது. இந்தியாவை பொறுத்தவரை கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு என இரண்டு தடுப்பூசிகள் மக்களுக்கு இலவசமாக செலுத்தப்பட்டது.

இதில் கோவிஷீல்டு என்பது வெளிநாட்டு தயாரிப்பாகும். பிரிட்டனின் அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தின் இந்த தடுப்பூசியை இந்தியாவில் சீரம் எனும் நிறுவனம் உற்பத்தி செய்து வழங்கியது. இந்த தடுப்பூசியை செலுத்திக்கொண்டவர்களில் மிக சொற்பமானவர்களுக்கு ரத்தம் உறைதல் பிரச்சனை இருப்பதாக அஸ்ட்ராஜெனெகா கூறியிருந்தது. ஆனால், இப்படி அறிவிப்பதற்கு முன்னரே இந்தியாவில் இந்த தடுப்பூசியை பெரும்பாலானோர் செலுத்தி முடித்துவிட்டிருந்தனர்.
அப்படி தடுப்பூசி செலுத்திக்கொண்ட தங்களது மகள்கள் இருவர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்ததாக, தமிழ்நாட்டை சேர்ந்த வேணுகோபாலன் கோவிந்தன் மற்றும் ஹைதராபாத்தை சேர்ந்த ரச்சனா கங்கு என இரண்டு பெற்றோர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர்.
இந்த வழக்கின் மீதான விசாரணை கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. அப்போது அரசு தரப்பில், "இது ஒரு இலவச தடுப்பூசி திட்டமாகும். நாங்கள் சுமார் 22,000 கோடி தடுப்பூசிகளை செலுத்தியிருக்கிறோம். இது ஒரு தன்னார்வ நடைமுறைதான். யாரையும் நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை. தடுப்பூசி திட்டம் குறித்த முந்தைய வழக்கில் நீதிபதிகள் இதனை அங்கீகரித்துள்ளனர்" என்று கூறியிருந்தது.
ஆனால் இதனை மனுதார்களான பெற்றோர்கள் எதிர்த்தனர். அரசு தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனைவரையும் நேரடியாகவும், மறைமுகமாகவும் கட்டாயப்படுத்தியது என்று குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், "மனித குலத்திற்கு அச்சுறுத்தலாக இருந்த கொரோனா தொற்றுக்கு தீர்வு தடுப்பூசி மட்டுமே என்று நம்பி போதுமான ஆதாரங்கள் இல்லாமல், அரசாங்கத்தாலும், அதன் அமைப்புகளாலும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டது. தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் மூலம் ஏற்படும் பக்க விளைவுகளை சமாளிக்க எந்த மருத்துவருக்கும் பயிற்சியளிக்கப்படவில்லை" என்றும் விமர்சித்துள்ளனர்.
இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்த மத்திய அரசு, மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வலியுறுத்தியது. ஆனால் இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம் வழக்கை அடுத்தக்கட்ட விசாரணைக்காக நவம்பர் மாதம் 26ம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications
