உதயநிதி ஸ்டாலின், பின்விளைவுகளை பற்றி யோசித்து பேசியிருக்க வேண்டும்.. உச்சநீதிமன்றம் கருத்து
டெல்லி: ஒரு அமைச்சராக பதவி வகிக்கும் நிலையில் பேசும் போது எதிர் விளைவுகளை உணர்ந்து பேச வேண்டும் என தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கி உள்ளது.
தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது, சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று போட்டிருக்கிறீர்கள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். என பேசியிருந்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

ஆனால் அமைச்சர் உதயநிதியின் இந்த பேச்சு பாஜகவினரால் திசை திருப்பப்பட்டு பொய்யாக பரப்பிவிடப்பட்டது. அதாவது சனாதன தர்மத்தை பின்பற்றுவோரை இனப்படுகொலை செய்ய வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் பேசியதாக வட இந்திய மாநிலங்களில் பரப்பிவிட்டது பாஜக. இதனால் பிரதமர் மோடி முதல் மத்திய அமைச்சர்கள் பலரும் உதயநிதிக்கு கண்டனம் தெரிவித்தனர். இது தொடர்பாக பல்வேறு மாநிலங்களில் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வழக்குகளும் தொடரப்பட்டன.
இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில் தம் மீது பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் அனைத்தையும் ஒன்று சேர்த்து ஒரே வழக்காக விசாரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் இந்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது. இன்றைய விசாரணையின் போது, கருத்து சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தி விட்டு தற்போது பாதுகாப்பு கோரி நீதிமன்றம் வந்துள்ளீர்கள் என நீதிபதி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்த உதயநிதி ஸ்டாலின் தரப்பு, சனாதன தர்ம ஒழிப்பு பேச்சு தொடர்பான வழக்கை எதிர்கொள்ள மாட்டோம் என தெரிவிக்கவில்லை. அனைத்து வழக்குகளையும் ஒரே இடத்தில் விசாரிக்க வேண்டும் என்றுதான் கேட்டுள்ளோம் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
இதனையடுத்து, நீங்கள் ஒரு சாமானியர் அல்ல. அமைச்சர் பதவி வகிப்பவர்; அமைச்சராக இருந்து கொண்டு பேசும் போது எதிர்விளைவுகளையும் உணர்ந்து பேச வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இந்த வழக்கின் விசாரணை மார்ச் 15-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications