இந்திய கலாச்சாரம் என்ன ஆவது.. ஓரினச்சேர்க்கை திருமண தீர்ப்பை வரவேற்கிறேன் - பார் கவுன்சில் தலைவர்
டெல்லி: தன் பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்க மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றத்தின் முடிவை வரவேற்பதாக உச்சநீதிமன்ற பார் அசோசியேசன் தலைவர் அதிஷ் அகர்வாலா தெரிவித்து உள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தியாவில் ஓரினச் சேர்க்கை குற்றமில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்வதற்கு சட்டத்தில் இடமில்லை. இருப்பினும் இந்தியாவில் ஆங்காங்கே தன் பாலின திருமணங்கள் நடந்து வந்தன. இந்த நிலையில் ஓரினச் சேர்க்கை திருமணத்தை இந்தியாவிலும் சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை LGBTQ சமூகத்தினர் தொடர்ந்து முன்வைத்து வந்தனர்.

இந்த நிலையில் ஓரினச் சேர்க்கை திருமணத்தை சட்டப்பூர்வமாக்க கோரி உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், எஸ்.ஆர்.பட், ஹிமா கோஹ்லி மற்றும் பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த மனுக்களை விசாரித்து வந்தது. இந்த வழக்கில் மத்திய அரசு தன் பாலின திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டது.
கடந்த மே மாதம் 11 ஆம் தேதி விசாரணை நிறைவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு மீதான தீர்ப்பை 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று வழங்கியது. அதில் 4 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கி உள்ளார்கள். தலைமை நீதிபதி சந்திரசூட்டின் தீர்ப்போடு மாறுபட்ட தீர்ப்பை நீதிபதி கவுல், நீதிபதி பட், நீதிபதி நரசிம்மா ஆகியோர் அளித்து இருக்கிறார்கள். தலைமை நீதிபதி சந்திரசூட் ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவான தீர்ப்பை அளித்தார்.
திருமண சட்டங்களில் கொண்டு வரப்பட்ட பல்வேறு சீர்திருத்தங்கள் சட்டப்படியே சாத்தியமானது என தெரிவித்த அவர், சிறப்பு திருமண சட்டம் ரத்து செய்யப்படுவது விடுதலைக்கு முந்தைய காலத்துக்கு நாட்டை கொண்டு செல்வதாகும் என்றார். நீதிமன்றம் தன்பாலின திருமண விவகாரத்தில் தலையிடக்கூடாது என்ற மத்திய அரசின் வாதத்தை நிராகரித்த அவர், சமூகத்தில் ஓரின சேர்க்கையாளர்கள் அமைதியாக வாழவும், யாரோடு சேர்ந்த வாழ வேண்டும் என்ற சுதந்திரமும் இருப்பதாக கூறினார்.
நீதிபதிகள் வழங்கிய மாறுபட்ட தீர்ப்பின் காரணமாக உச்சநீதிமன்றம் ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்தை சட்டப்பூர்வமாக்கவில்லை. இதுகுறித்து உச்சநீதிமன்ற பார் அசோசியேசன் தலைவர் அதிஷ் அகர்வாலா செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கையில், "ஒரு பாலின திருமணத்தை அனுமதிக்க முடியாது என்ற உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை நான் வரவேற்கிறேன். இந்தியாவின் அமைப்பையும், சூழலையும் மாசுபடுத்த சிலர் முயற்சிக்கிறார்கள். ஆனால், இந்திய அரசின் கருத்தை ஏற்றுக்கொண்டு தன் பாலின திருமணத்தை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து இருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
தன் பாலின திருமணத்தை அனுமதிக்கும் சட்டத்தை வழங்க நீதிமன்றத்துக்கு உரிமை இல்லை என்றும், நாடாளுமன்றத்துக்கு மட்டுமே அதற்கான அதிகாரம் இருப்பதாக மத்திய அரசு வாதிட்டது. அதை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டு இருக்கிறது. எனவே நாங்கள் மகிழ்ச்சியாக உள்ளோம். பாரம்பரிய பெருமை கொண்ட இந்தியாவில் தன் பாலின திருமணங்களை ஏற்க முடியாது என உச்சநீதிமன்றம் கூறி இருக்கிறது. இந்திய மக்களுக்கு என்று சில மதிப்புகள் உள்ளன." என்று அவர் தெரிவித்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications