ஆளுநருக்கு ‛நோ’..டெல்லி நிர்வாக அதிகாரம் யாருக்கு? மத்திய அரசை வென்ற ஆம்ஆத்மி!உச்சநீதிமன்றம் அதிரடி
டெல்லி: டெல்லியில் குடிமைப்பணிகள் அதிகாரிகள் நியமனம் தொடர்பான விஷயத்தில் அதிகாரம் யாருக்கு? என்பதில் ஆளுநர் மூலம் ஆம்ஆத்மி அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அதிரடியாக இன்று தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இந்திய தலைநகர் டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். இங்கு மத்திய குடிமைப்பணிகள் அதிகாரிகள் நியமனம் என்பது நேரடியாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இதனால் பணி நியமனம், பணி இடமாற்றத்தை மத்திய அரசு தான் மேற்கொண்டு வருகிறது. இதனை டெல்லி அரசு விரும்பவில்லை. இந்நிலையில் மத்திய அரசிடம் இருக்கும் அதிகாரத்தை எதிர்த்து ஆம்ஆத்மி சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டது. அங்கு வழக்கு விசாரணை நடந்து வந்தது. முன்னதாக விசாரணையின்போது மத்திய அரசு மற்றும் டெல்லி அரசு சார்பில் தனித்தனியே வாதங்கள் முன்வைக்கப்பட்டன. மத்திய அரசு சார்பில், ‛‛டெல்லி இந்தியாவின் தலைநகராக உள்ளது. உலக நாடுகள் டெல்லியின் வழியாக தான் இந்தியாவை பார்க்கின்றனர். இதனால் அரசு ஊழியர்களின் நியமனம் மற்றும் இடமாற்றம் தொடர்பாக மத்திய அரசுக்கு அதிகாரம் என்பது தேவையான மற்றும் அவசியமான ஒன்று.
மத்திய அரசுக்கு டெல்லியின் நிர்வாகத்தின் மீது சிறப்பு அதிகாரங்கள் இருப்பதும், முக்கியமான பிரச்சினைகளில் கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதும் அவசியம். மத்திய அரசுக்கும், டெல்லிக்கும் இடையே நேரடி மோதலை தடுக்கவும் சட்டங்கள் உள்ளன. இதனால் டெல்லியின் மீது மத்திய அரசு கட்டுப்பாட்டை வைத்திருப்பது தேச நலனுக்கு முக்கியமானது'' என வாதிடப்பட்டது.
இதற்கு டெல்லி அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதுதொடர்பாக டெல்லி தரப்பில், ‛‛மத்திய அரசுக்கு சிறப்பு அதிகாரம் வழங்குவது என்பது டெல்லி சட்டசபையை அர்த்தமற்றதாக ஆக்கவிட்டது. இதனால் டெல்லி அரசால் தனித்து மற்றும் சுதந்திரமாக செயல்பட முடியாத சூழல் உள்ளது. டெல்லி அரசின் முடிவுகள் நிலுவையில் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் டெல்லி அரசின் கொள்கை சார் முடிவுகளை, மத்திய அரசு துணை நிலை ஆளுநர் மூலம் தடுத்து செயல்பட விடாமல் செய்கிறது. இதற்கு தீர்வு காண தான் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது'' என வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களை கேட்ட அரசியல் சாசன அமர்வின் நீதிபதிகள் வழக்கு தீர்ப்பை ஒத்திவைத்தனர். இந்நிலையில் தான் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதன்படி ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனத்தில் மாநில அரசுக்கே அங்கீகாரம் உள்ளது. அதேபோல் டெல்லியில் டெல்லி அரசுக்கு தான் அதிகாரம் உள்ளது என அதிரடியாக உத்தரவிட்டது. மேலும் டெல்லியில் ஆளுநருக்கு அதிகாரம் என்ற மத்திய அரசின் வாதத்தை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஏற்றுக்கொள்ளவில்லை.
மேலும் மக்களாட்சியில் உண்மையான நிர்வாக அதிகாரம் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திடம் தான் இருக்க வேண்டும். அனைத்து அரசு பணிகளின் மீது டெல்லி அரசுக்கு அதிகாரம் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் டெல்லி அமைச்சரவையின் முடிவுக்கு துணை நிலை ஆளுநர் கட்டுப்பட்டவர். பொது ழஓங்கு, காவல்துறை, நிலம் உள்ளிட்ட துறைகளை தவிர்த்து பிற எஞ்சிய பணிகளில் சட்டம் இயற்ற டெல்லி அரசுக்கு அதிகாரம் உள்ளது என அதிரடியா உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications