வதந்தி விவகாரம்: தமிழ்நாட்டு அமைதியை சீர்குலைப்பதா? காஷ்யப் மீதான NSA ரத்து இல்லை- உச்சநீதிமன்றம்
டெல்லி: தமிழ்நாட்டில் வட இந்திய தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பியதால் கைது செய்யப்பட்ட யூடியூபர் மணீஷ் காஷ்யப் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழான நடவடிக்கையை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
தமிழ்நாட்டில் வட இந்திய தொழிலாளர்கள் திட்டமிட்டு படுகொலை செய்யப்படுவதாக அண்மையில் பாஜகவினர் சமூக வலைதளங்களில் வதந்தியை பரப்பினர். இதனால் வட இந்திய மாநிலங்களில் பதற்றம் ஏற்பட்டது.

வட இந்திய மாநில அரசுகள், தமிழ்நாட்டுக்கு குழுக்களை அனுப்பி ஆய்வும் நடத்தியது. இந்த விவகாரத்தில் பாஜகவினர் சமூக வலைதளங்களில் பொய்யான வதந்திகளை பரப்பியது அம்பலமானது. இதனையடுத்து இத்தகைய வதந்திகளை பரப்பியவர்கள் தேடித் தேடி கைது செய்யப்பட்டனர்.
வட இந்திய தொழிலாளர்கள் விவகாரத்தில் வதந்தி பரப்பிய விவகாரத்தில் யூ டியூபர் மணீஷ் காஷ்யப், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அவர் மீது தமிழ்நாட்டில் மட்டும் 6 வழக்குகள் நிலுவையில் உள்ளன. பீகார் மாநிலத்தில் காஷ்யப் மீது 12 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

இந்நிலையில் தம் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்யக் கோரியும் தம் மீதான வழக்குகளை ஒன்றாக விசாரிக்க உத்தரவிடக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் காஷ்யப் மனுத் தாக்கல் செய்தார். இதனை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச், மணீஷ் காஷ்யப் மனுவை இன்று டிஸ்மிஸ் செய்தது. மேலும் தமிழ்நாடு அமைதியான மாநிலமாக திகழ்கிறது; மாநிலத்தின் அமைதியை சீர்குலைக்க எதை வேண்டுமானாலும் பரப்பிவிடுவதா? எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் காட்டமாக கேள்வி எழுப்பினர். அத்துடன் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை ஏன் அணுகக் கூடாது என்றும் நீதிபதிகள் சுட்டிக் காட்டினர்.












Click it and Unblock the Notifications