தன்பாலின திருமணம் செல்லாது தீர்ப்புக்கு எதிரான அப்பீல்- உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா விலகல்
டெல்லி: தன்பாலின திருமணம் செல்லாது என்ற தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை பெஞ்ச்சில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா விலகினார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச்சில் சஞ்சீவ் கண்ணா உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.
நமது நாட்டில் தன் பாலின திருமணத்துக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் கிடையாது. இந்த திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் கோரி 21 பேர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இத்தகைய மனுக்களை விசாரிக்கவே கூடாது என்பது மத்திய அரசின் தொடக்க வாதமாக இருந்தது.

இதனை நிராகரித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்தது. தன் பாலின தரப்பு மற்றும் மத்திய அரசு தரப்பில் நீண்ட வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
இதனையடுத்து உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச் நீதிபதிகள், தன் பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்க எதிர்ப்பு தெரிவித்து தீர்ப்பு அளித்தனர். இதனடிப்படையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், திருமணம் மாறாதது என சொல்ல முடியாது. சிறப்பு திருமண சட்டங்களில் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டுமா? இல்லையா? என்பது குறித்து சட்டங்களை இயற்றும் நாடாளுமன்றமே முடிவு செய்ய வேண்டும். உச்சநீதிமன்றத்தை அத்தகைய வரம்புக்குள் செல்லவிடவும் கூடாது கூறி தன் பாலின திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் இல்லை என்ற தீர்ப்பை உறுதி செய்தனர்.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் 5 நீதிபதிகள் பெஞ்ச் பகல் 1.30 மணிக்கு கூடியது. இந்த பெஞ்ச்சில் நீதிபதிகள் பிவி நாகரத்தினா, சஞ்சீவ் கண்ணா, ஹிமா கோஹ்லி, பிஎஸ் நரசிம்மா இடம் பெற்றிருந்தனர். அப்போது இவ்வழக்கில் தாம் விலகிக் கொள்வதாக நீதிபதி சஞ்சீவ் கண்ணா தெரிவித்தார். தனிப்பட்ட காரணங்களுக்கான இந்த விசாரணை பெஞ்ச்சில் இருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார் நீதிபதி சஞ்சீவ் கண்ணா. இதனையடுத்து இம்மேல்முறையீட்டு மனு மீதான வழக்கு விசாரணையும் ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications