"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
டெல்லி: திருமணமாகாத இருவர் பரஸ்பர சம்மதத்துடன் உடலுறவு கொள்வது, ஒரு நபரின் குணத்தைத் தவறாக மதிப்பிடுவதற்கான காரணமாக அமையாது என்று உச்சநீதிமன்றம் மிக முக்கிய கருத்தைக் கூறியுள்ளது. தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு காவலர் தேர்வரின் பணி நியமனம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர், 2014ம் ஆண்டு காவலர் பணிக்கு விண்ணப்பித்தார். அவர் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அவர் மீது 2014-ல் ஒரு கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. பெண் ஒருவருடன் உடலுறவு கொண்டுவிட்டு, பிறகு திருமணம் செய்ய மறுத்ததாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றம்
இருப்பினும், 2015ம் ஆண்டிலேயே இந்த வழக்கு லோக் அதாலத் மூலம் சமரசமாக முடிக்கப்பட்டது. அந்த இளைஞர் தனது விண்ணப்பப் படிவத்திலும் இந்த வழக்கு குறித்த விவரங்களை வெளிப்படையாகக் குறிப்பிட்டிருந்தார். ஆனால் "பெண்ணை ஏமாற்றியது ஒழுக்கக்கேடான செயல்" எனக் கூறி, தெலங்கானா காவலர் தேர்வு வாரியம் அவரது பணி நியமனத்தை ரத்து செய்தது. இதனை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தை நாடினார். நீதிபதிகள் மன்மோகன் மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து, பின்வரும் முக்கிய கருத்துக்களைப் பதிவு செய்தது.
சட்டம் இல்லை
நீதிபதிகள் அப்போது கூறுகையில், "திருமணமாகாத இருவர் பரஸ்பர சம்மதத்துடன் உறவு கொள்வதைத் தடுக்கும் சட்டம் இந்தியாவில் ஏதுமில்லை. எனவே, அத்தகைய உறவில் இருந்த காரணத்திற்காகவே ஒரு நபரின் குணாதிசயம் மோசமானது என்று முடிவு செய்ய முடியாது. ஒவ்வொரு உறவும் திருமணத்தில் தான் முடிய வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு உறவு திருமணத்தில் முடியவில்லை என்பதற்காகவே, ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரை ஏமாற்றிவிட்டதாகக் கருத முடியாது. மாறிவரும் சமூக யதார்த்தங்களை அதிகாரிகள் உணர்ந்து செயல்பட வேண்டும்.
பெண் சொல்லியிருக்க வேண்டும்
வழக்கு லோக் அதாலத் மூலம் சமரசமாக முடிந்துவிட்டால், அதை அந்த நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. கட்டாயத்தின் பேரில் அந்தச் சமரசம் நடந்தது என்பதற்கு ஆதாரம் இல்லாதவரை, வேலை வழங்குபவர் அதை ஒரு குறையாகக் கருத முடியாது. இந்த வழக்கில் புகாரளித்த பெண்ணும், அந்த இளைஞரும் பல ஆண்டுகளாக அண்டை வீட்டாராகப் பழகி வந்தவர்கள். அந்தப் பெண் ஏமாற்றப்பட்டாரா இல்லையா என்பதை அவரே நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்திருக்க வேண்டும். ஆனால், அவரே வழக்கை முடித்துக்கொள்ளச் சம்மதித்த பிறகு, காவலர் தேர்வு வாரியம் தானாக முன்வந்து அவர் ஏமாற்றப்பட்டார் என்று முடிவு செய்ய முடியாது.
தீர்மானிக்க முடியாது
ஒருவர் மீது கிரிமினல் வழக்கு இருந்து, அது முடிந்துவிட்ட நிலையில், அதை வைத்து தன்னிச்சையாக முடிவெடுக்கக் கூடாது. அந்த நபர் உண்மையில் குற்றம் செய்தாரா? அதற்கான ஆதாரங்கள் உள்ளனவா? என்பதை ஆராயாமல், வெறும் புகாரை மட்டும் வைத்துக்கொண்டு ஒருவரின் குணாதிசயத்தைத் தீர்மானிக்கக் கூடாது" என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த வழக்கில் அந்த இளைஞர் மீது தவறு என்பதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை என்றும், புகார்தாரரே வழக்கைக் கைவிட்டுவிட்ட நிலையில், அவரது பணி நியமனத்தை ரத்து செய்தது செல்லாது என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. உயர்நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவைத் தள்ளுபடி செய்த நீதிபதிகள், அந்த இளைஞருக்குப் பணி வழங்க வழிவகை செய்தனர்.












Click it and Unblock the Notifications