இந்தியர்களின் தகவல்களை திருடும் வாட்ஸ்அப்? குட்டு வைக்கும் உச்ச நீதிமன்றம்.. இன்று முக்கிய விசாரணை
டெல்லி: வாட்ஸ்அப்- மெட்டா தளங்கள் தொடர்பான முக்கிய வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. வாட்ஸ்அப் சேவைகளின் பிரைவசி தொடர்பான இந்த வழக்கை இன்று தலைமை நீதிபதி சூர்யா தலைமையிலான அமர்வு விசாரிக்கிறது. இதில் பல முக்கியமான வாதங்கள் முன்வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் வாட்ஸ்அப் நிறுவனம் தான் மெசேஜ்ஜிங் செயலிகளில் ஆதிக்கம் செலுத்துவது அனைவருக்கும் தெரியும். வாட்ஸ்அப் ஆதிக்கத்தைக் காலி செய்யப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் கூட இதுவரை அதில் பெரிய பலன் இல்லை. இதனால் யூசர்களுக்கு வாட்ஸ்அப் மட்டுமே ஒரே சாய்ஸாக இருந்து வருகிறது.

வாட்ஸ்அப் கொள்கை
இந்தச் சூழலில் தான் கடந்த 2021ம் ஆண்டு வாட்ஸ்அப் தனது புதிய பிரைவசி கொள்கைகளைக் கொண்டு வந்தது. வாட்ஸ்அப் சேவையைத் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்றால் இந்த பிரைவசி பாலிசிக்களை கட்டாயம் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று மெட்டா தனது யூசர்களை வற்புறுத்தியது. வாட்ஸ்அப் டேட்டாவை அதன் தாய் நிறுவனமான மெட்டா, மற்ற தளங்களிலும் யூசர்களுக்கு விளம்பரம் காட்டும்.
ரூ.213 கோடி அபராதம்
வாட்ஸ்அப் தளத்திற்கு வேறு போட்டி நிறுவனங்கள் இல்லாததால் வேறு வழியின்றி யூசர்கள் இதை ஒப்புக்கொள்ள வேண்டி இருந்தது. இதுவே பிரச்சனைக்கு மையப்புள்ளி. இந்த விவகாரத்தை விசாரித்த இந்தியப் போட்டி ஆணையம் (CCI) ₹213 கோடி அபராதம் தீர்ப்பு அளித்தது. மேலும், டேட்டாவை பகிரவும் தடை விதித்தது. முதலில் இதை எதிர்த்து தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் அபராதம் உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், டேட்டா பகிர்வுக்கு அனுமதி தரப்பட்டது.
அனுமதிக்க முடியாது
இருப்பினும், அதையும் எதிர்த்து மெட்டா நிறுவனம் மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கு வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. கடந்த முறை விசாரணைக்கு வந்த போது தலைமை நீதிபதி சூர்யா தலைமையிலான அமர்வு இந்த விவகாரத்தில் சில காட்டமான கருத்துகளைக் கூறியிருந்தது. இந்தியர்களின் பிரைவசியுடன் விளையாட முடியாது என்றும் இந்தியர்களின் டேட்டாவில் ஒரு சிறு பகுதியையும் பகிர அனுமதிக்க மாட்டோம் என்று கூறியிருந்தனர்.
தகவல்களை திருடும் வழி
மேலும், இந்தியர்களைச் சுரண்டுவதை நீதிமன்றம் அனுமதிக்காது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். மேலும், இந்தியாவின் அரசியலமைப்பைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் அப்படிப் பின்பற்ற முடியாத நிறுவனங்கள் தாராளமாக நாட்டை விட்டே வெளியேறலாம் என்றும் காட்டமான கருத்துகளை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், நிறுவனங்களின் பாலிசிக்களை புரிந்து கொள்வதில் நீதிபதிகளே சிரமப்படும் போது மக்கள் எப்படி அதைப் புரிந்து கொள்வார்கள் எனக் கேள்வி எழுப்பிய நீதிமன்றம், இது தனிப்பட்ட தகவல்களைத் திருடும் வழி என்றும் கருத்து கூறியிருந்தனர்.
இந்தச் சூழலில் தான் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இதில் பல முக்கியமான வாதங்கள் முன்வைக்கப்படும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications