எல்லாம் சரிதான்! SIRல் தவறு எதுவும் இல்லை! எல்லா மனுக்களையும் மொத்தமாக தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்
டெல்லி: இந்தியாவில் பீகார், மேற்கு வங்கம், தமிழ்நாடு என பல்வேறு மாநிலங்களிலும் தேர்தல் ஆணையம் SIR எனப்படும் சிறப்பு தீவிர திருத்த பணிகளை மேற்கொண்டு இருந்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின்படி தேர்தல் ஆணையம் இதை செய்யலாம் என்றும் இதற்கான அதிகாரங்கள் இருப்தாகவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
கடந்தாண்டு தேர்தல் ஆணையம் எஸ்ஐஆர் எனப்படும் சிறப்பு தீவிர திருத்த பணிகளை கையில் எடுத்தது. முதலில் பீகார் மாநிலத்தில் இந்த திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பீகாரை தொடர்ந்து இந்தாண்டு தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் எஸ்ஐஆர் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும், இதை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டன.

விசாரணை
தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மாலா பாக்சி மற்றும் விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்குகளை விசாரித்தது. அப்போது பீகார் மற்றும் பல மாநிலங்களில் தேர்தல் ஆணையம் நடத்திய இந்த 'எஸ்ஐஆர்' முறைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் உச்ச நீதிமன்றம் மொத்தமாக தள்ளுபடி செய்தது. "இந்தச் சிறப்புத் திருத்த நடவடிக்கை மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்திற்கு ஒரு புதிய உயிரைக் கொடுத்துள்ளது" என நீதிபதிகள் பாராட்டியுள்ளனர்.
பீகாரில் தான் முதலில் எஸ்ஐஆர் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அங்கு தேர்தல் ஆணையம் இந்தச் சிறப்புத் தீவிரத் திருத்த முறையை அமல்படுத்திய போது, வரைவுப் பட்டியலிலிருந்து ஒரே அடியாகக் கிட்டத்தட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. வழக்கு விசாரணையின்போது மனுதாரர் ஜனநாயகச் சீர்திருத்தங்களுக்கான சங்கம் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், "இது தேர்தல் ஆணையத்தின் வேலையே அல்ல. குடியுரிமையைச் சரிபார்க்கும் மத்திய அரசின் என்ஆர்சி போன்ற ஒரு ஆபத்தான மறைமுக உத்தியை தேர்தல் ஆணையம் கையில் எடுத்துள்ளது. இறந்துபோனவர்கள், இடம் பெயர்ந்தவர்கள் என்ற பெயரில் லட்சக்கணக்கான சாமானிய வாக்காளர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது" என்றார்.
வாதங்கள்
இந்த எஸ்ஐஆர் விதிகளின்படி, ஒரு வாக்காளரின் பெயர் 2002 அல்லது 2003ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் இல்லை என்றால், அவர் தங்களின் குடும்பப் பூர்வீகப் பிணைப்பை, அதாவது Ancestral Linkageஐ நிரூபிக்க வேண்டும் என்ற கண்டிஷன் இருந்ததுதான் எதிர்க்கட்சிகளின் கொந்தளிப்பிற்கு முக்கியக் காரணம். இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் சார்பில் வாதாடிய வழக்கறிஞர், "ஒருவரிடம் வெறும் ஆதார் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டை இருப்பதாலேயே அவர்கள் இந்தியாவின் முறையான குடிமகன் என்று நாம் கணக்கில் கொள்ள முடியாது.. போலி வாக்காளர்களை நீக்கி, துல்லியமான பட்டியலைத் தயாரிப்பதே எங்களின் கடமை" என்ற வாதத்தை முன்வைத்தது.
4 முக்கியமான கேள்விகள்
இந்த வழக்கில் 4 முக்கியக் கேள்விகளை முன்வைத்த உச்ச நீதிமன்ற அமர்வு, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையில் எவ்வித தன்னிச்சையான அல்லது சட்டவிரோதமான ஆதிக்கமும் இல்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளது.
- கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட வழக்கமான திருத்த முறையிலிருந்து இது மாறுபட்டது என்பதால் மட்டுமே, தேர்தல் ஆணையம் தனது அதிகார வரம்பைத் தாண்டி செயல்பட்டதாகக் கூற முடியாது.
- வாக்காளர்களின் பெயர்களை நீக்குவதற்கு முன்பாக அவர்களுக்கு முறையான 'ஷோ-காஸ்' நோட்டீஸ்கள் அனுப்பப்படும் நடைமுறைச் பாதுகாப்பு இதில் சேர்க்கப்பட்டுள்ளதால், இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதே என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
- துல்லியமான வாக்காளர் பட்டியலை உருவாக்குவது, நாட்டின் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் என்ற ஜனநாயகக் கொள்கையை இன்னும் பலப்படுத்துமே தவிர பலவீனப்படுத்தாது.
- இருப்பினும், ஆவணங்களைச் சரிபார்க்கும் தேர்தல் ஆணையத்தின் இந்தத் தன்னிச்சையான அதிகாரம் எல்லையற்றது அல்ல என்றும், அது தேர்தல் நேர்மையைக் காக்கும் எல்லையோடு நின்று கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்
தள்ளுபடி
இந்த கேள்விகளை எழுப்பிய உச்ச நீதிமன்றம் அனைத்து மேல்முறையீட்டு மனுக்களையும் தள்ளுபடி செய்தது. தேர்தல் களம் நியாயமாக இருக்க வேண்டும் என்றால், வாக்காளர் பட்டியல் அக்மார்க் சுத்தமாக இருக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு தேர்தல் ஆணையத்திற்கு கிடைத்த மெகா பூஸ்ட் ஆகவே பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications