தெருநாய்களுக்கு குட்பை.. பொதுஇடங்களில் இருக்கவே கூடாது.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
டெல்லி: பொது இடங்களில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள் அருகே சுற்றி வரும் தெருநாய்களை முற்றிலுமாக அப்புறப்படுத்த வேண்டும். 8 வாரங்களில் வேலி அமைக்க வேண்டும். இங்கு பிடிக்கப்படும் தெருநாய்களுக்கு தடுப்பூசி மற்றும் கருத்தடை செய்து பிற இடங்களில் விட வேண்டும். இதனை அனைத்து மாநில அரசுகளும் உறுதி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
நம் நாட்டில் தெருநாய்கள் குழந்தைகள், பெண்கள் உள்பட அனைவரையும் விரட்டி விரட்டி கடித்து வருகிறது. இதில் குழந்தைகள் பலியாகி உள்ளனர். இந்நிலையில் தான் சமீபத்தில் தெருநாய்களின் அட்டகாசம் அதிகரித்தது.
இதையடுத்து பத்திரிகைகளில் வெளிவந்த தெருநாய்கள் கடித்து இறந்தவர்கள் தொடர்பான செய்திகள் மற்றும் ரேபிஸ் வழக்குகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியது.

ஜூலை 28 முதல் உச்சநீதிமன்றம் தெருநாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு அடுத்தடுத்து உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அதன்படி அரசு அலுவலகங்களில் பணியாற்றுவோர் தெருநாய்களுக்கு உணவு வழங்க கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறியது. அதுமட்டுமின்றி தெருநாய்களை கண்டுபிடித்து தடுப்பூசி செலுத்தி கருத்தடை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்வி அஞ்சாரியா ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. அப்போது தெருநாய்கள் விஷயத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூடுதல் உத்தரவுகளை பிறப்பித்தனர்.
அதன்படி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் தங்கள் அதிகார வரம்பிற்குள் உள்ள அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் விளையாட்டு வளாகங்கள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்களில் தெருநாய்கள் நுழைவதை தடுக்க வேண்டும். இதற்காக வேலி அமைக்க வேண்டும்.
மேலும் இந்த பகுதிகளில் உள்ள தெருநாய்களை பிடித்து காப்பகங்களில் வைத்து தடுப்பூசி செலுத்தி கருத்தடை செய்ய வேண்டும். இந்த நடவடிக்கைகளை விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டு விதிகளின் படி மேற்கொள்ள வேண்டும். அதன்பிறகு அந்த தெருநாய்களை வேறு இடத்தில் விட வேண்டும். ஏனென்றால் மீண்டும் அதே இடத்தில் விட்டால் அது இந்த நடவடிக்கையே கேள்விக்குள்ளாக்கிவிடும்.
இதனை ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களும் மேற்பார்வை செய்து பொது இடங்களில் தெருநாய்கள் நுழைவதை தடுக்க வேலி அமைக்கப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த குறிப்பிட்ட வளாகத்தில் தெருநாய்கள் இல்லை என்பதை உறுதி செய்யும் வகையில் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்
இதுதொடர்பாக அனைத்து மாநில அரசுகளும் 8 வாரத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் வழக்கு விசாரணையை 2026 ஜனவரி மாதம் 13ம் தேதிக்கு ஒத்திவைத்தது. முன்னதாக இந்த வார தொடக்கத்தில் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தெருநாய்களை கட்டுப்படுத்தி மக்களை பாதுகாக்க இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் நடைமுறைப்படுத்தும் வகையில் சில உத்தரவுகளை பிறப்பித்தது. மேலும் வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்து இருந்தது. ஆனால் பல மாநிலங்கள் உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றவில்லை.
தெருநாய் தொல்லையில் இருந்து மக்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்காத மாநிலங்களை (மேற்கு வங்கம், தெலுங்கானா தவிர) உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்தது. அதோடு பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்யத் தவறியதற்காக பிற மாநில, யூனியன் பிரதேச தலைமைச் செயலாளர்களுக்கு சம்மன் அனுப்பி ஆஜராக கூறியது. அனைவரும் ஆஜராகினர்.
அப்போது தெருநாய்களுக்கு உணவளிக்க ஒவ்வொரு வார்டிலும் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தாத வகையில் உள்ளாட்சி அமைப்புகள் தனியாக ஒரு இடம் ஒதுக்கவில்லை என்பதற்கு தங்கள் அதிருப்தியை தெரிவித்து இருந்தது. இந்நிலையில் தான் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதாக கூறிய உச்சநீதிமன்றம் கூடுதல் உத்தரவுகளை பிறப்பித்து வழக்கு விசாரணையை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 13ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications