வீட்டை இடித்தபோது புத்தகத்துடன் ஓடிய சிறுமி.. உபி புல்டோசர் ஆக்ஷனை விளாசிய உச்சநீதிமன்ற நீதிபதிகள்
டெல்லி: உத்தர பிரதேசத்தில் புல்டோசர் கொண்டு வீடுகளை இடிக்கும் நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் வீடு இடிக்கப்பட்டபோது அதில் இருந்து புத்தகத்தை தூக்கிக்கொண்டு வெளியே ஓடிய சிறுமியின் வீடியோவை பார்த்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்ததோடு உத்தர பிரதேச அரசுக்கு டோஸ்விட்டனர்.
உத்தர பிரதேசத்தில் பாஜகவின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக யோகி ஆதித்யநாத் செயல்பட்டு வருகிறார். இங்கு குற்றங்களில் தொடர்பு ஈடுபடுவோர், வன்முறையில் ஈடுபடுவோர், மோதலை தூண்டும் நபர்கள் மீது அதிரடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சில வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் வீடுகளும் புல்டோசர் மூலம் இடித்து அகற்றப்பட்டு வருகிறது.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும் நீதிமன்றங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அந்த வகையில் கடந்த 2021ம் ஆண்டில் உத்தர பிரதேச மாநிலம் பிரக்யாராஜில் உள்ள அம்பேத்கர் நகரில் வீடுகள் புல்டோசர் மூலம் இடித்து அகற்றப்பட்டன. நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டிய புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை பிரக்யாராஜ் உள்ளாட்சி அதிகாரிகள் மேற்கொண்டனர்.
இதில் வழக்கறிஞர், பேராசிரியர், 2 பெண்கள் உள்ளிட்டவர்கள் வீடுகளை இழந்தனர். இந்த நடவடிக்கைக்கு எதிராக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் இடித்து அகற்றப்பட்ட வீடுகளுக்கு இழப்பீடு என்பது கோரப்பட்டது. ஆனால் அதனை நீதிமன்றம் ஏற்க மறுத்ததோடு மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏஎஸ் ஒகா, புயான் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது வீடுகளை இடித்து அகற்றிய நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனத்தை பதிவு செய்தது. இது மனிதாபிமானமற்ற செயல். மக்கள் வாழும் உரிமையை இது பறிக்கிறது புல்டோசரால் இடித்து தள்ளப்பட்ட வீடுகளுக்கு 6 வாரங்களுக்குள் தலா ரூ.10 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கில் வீடுகளை இடித்தபோது சிறுமி புத்தகத்தை எடுத்து கொண்டு ஓடும் வீடியோவை பார்த்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் வருத்தம் தெரிவித்தனர்.
அதாவது பிரக்யாராஜில் வீடுகளை இடித்தபோது 8 வயது சிறுமி தனது வீட்டில் இருந்து தான் படிக்கும் புத்தகத்தை கையில் எடுத்து கொண்டு ஓடினார். வீடு போய்விட்டதே என்பதை தாண்டி தான் பயிலும் புத்தகத்தை அவர் ஆர்வமாக எடுத்து சென்றார். இதுதொடர்பான வீடியோவை உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருந்தனர். அதில் அகிலஷ் யாதவ், ‛‛உத்தர பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகரில் மக்களின் வீட்டை இடித்து அதிகாரத்தை காட்டுகின்றனர். இந்த வேளையில் சிறுமி தனது புத்தகத்தை எடுத்து கொண்டு ஓடுகிறார். இதனை செய்வது வேறு யாருமில்லை. மகள்களை காப்பாற்றுவோம். மகள்களுக்கு கல்வி வழங்குவோம் என்று சொல்லி வரும் பாஜக தான்'' என்று கூறியிருந்தார்.
இந்த வீடியாவை தான் நீதிபதிகள் பார்த்து கவலை தெரிவித்தனர். இதுபற்றி நீதிபதிகள், ‛‛புல்டோசர் கொண்டு வீடுகள் இடிக்கப்பட்டபோது சிறுமி ஒருவர் புத்தகத்தை எடுத்து கொண்டு ஓடுகிறார். இது அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கிறது. இந்த வழக்கில் எந்த ஒரு அவகாசமும் தராமலேயே 24 மணிநேரத்தில் புல்டோசர் மூலம் வீடுகளை இடித்து தள்ளியது கடும் கண்டனத்துக்குரியது. வீடுகளை அகற்றுவது தொடர்பான நோட்டீஸ் 24 மணிநேரத்துக்கு உள்ளாக தான் ஒட்டப்பட்டுள்ளது.
இது சட்டவிரோதமான செயல் என்பது மட்டுமின்றி வாழ்வதற்கான அடிப்படை உரிமையை பறிக்கிறது. இந்த வழக்குகள் நமது மனசாட்சியை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது. சட்டவிரோத கட்டடங்களை புல்டோசர் கொண்டு இடிப்பது என்பது துரதிர்ஷ்டவசமானது'' என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications