சமந்தாவால் அடிமையாகிட்டேன்.. ஆன்லைன் சூதாட்ட இணையதளத்துக்கு தடைக்கோரிய நபர்! உச்சநீதிமன்றம் மறுப்பு
டெல்லி: சன்னி லியோன், காஜல் அகர்வால், சமந்தா ஆகியோரின் விளம்பரத்தால் அடிமையாகிவிட்டேன். இதனால் ஆன்லைன் சூதாட்ட இணையதளங்களை முடக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க இன்று மறுத்தது. அதோடு இந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தி பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது.
இப்போது ஆன்லைன் சூதாட்ட இணையதளங்கள் மற்றும் செயலிகளின் எண்ணிக்கை என்பது அதிகரித்து வருகிறது. அதிர்ஷ்டத்தை நம்பி பலரும் இந்த ஆன்லைன் சூதாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் வெகுசிலரே வெற்றி பெறும் நிலையில் ஏராளமானவர்கள் பணத்தை இழக்கின்றனர்.
மேலும் சிலர் தொடக்கத்தில் சில ஆயிரங்களை வென்றுவிட்டு லட்சத்தில் வெல்ல முயன்று தொடர்ந்து ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழக்கின்றனர். இதனால் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் எழுந்துள்ளது.

அதுமட்டுமின்றி ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களுக்கு எதிராகவும் மக்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தான் உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. ஷேக் ரஹீம் என்பவர் தான் அந்த மனுவை தாக்கல் செய்தார். அதில் ஆன்லைன் சூதாட்ட இணையதளங்களை மத்திய அரசு முடக்க வேண்டும். இதற்கான உத்தரவை மத்திய அரசுக்கு பிறப்பிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
அதுமட்டுமின்றி ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் பிரபலங்கள் நடித்து வருகின்றனர். குறிப்பாக சன்னி லியோன், காஜல் அகர்வால், சமந்தா உள்ளிட்டவர்கள் விளம்பர தூதராக நடித்துள்ளனர். இந்த விளம்பரங்களை பார்த்து ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையானதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த மனு என்பது இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ‛‛நீங்கள் அடிமையானால் யார் பொறுப்பேற்க முடியும். ஏற்கனவே இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து அதனை திரும்ப பெற்றுள்ளீர்கள். இதனால் இந்த மனுவை ஏற்க முடியாது. மீண்டும் டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடுங்கள் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்து மனுவை முடித்து வைத்தது.












Click it and Unblock the Notifications