விவசாயிகள் படுகொலை: மத்திய அமைச்சர் மகனை ஏன் கைது செய்யவில்லை? உ.பி. அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
டெல்லி: சிலர் மீது குற்றச்சாட்டு உள்ளதால், உ.பி. லகிம்பூர் கேரியில் நடைபெற்ற விவசாயிகள் மீதான தாக்குதல் பற்றி சிபிஐ விசாரிப்பது தீர்வாக இருக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மத்திய அமைச்சருக்கு எதிரான பேரணியின்போது காரை விட்டு ஏற்றி 8 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான பொது நல வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது.

தலைமை நீதிபதி என்.வி.ரமணா முன்னிலையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. பொது நல வழக்கில், இந்த சம்பவம் குறித்து, சிபிஐ விசாரணை நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
ஆனால், சிபிஐ தீர்வு கிடையாது என்று தலைமை நீதிபதி ரமணா தெரிவித்தார்.
இன்று இந்த வழக்கு விசாரணை நடைபெற்றபோது உத்தர பிரதேச அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வேயிடம், இந்த வழக்கை சிபிஐக்கு வழங்கும் திட்டம் இருக்கிறதா என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். பதிலளித்த சால்வே, உத்தர பிரதேச அரசுக்கு அப்படியான எண்ணம் இல்லை. மற்றவை உங்கள் கையில்தான் இருக்கிறது கணம் நீதிபதி அவர்களே. எங்கள் விசாரணையில் நீங்கள் திருப்தியடையாவிட்டால் நீங்கள் சிபிஐ விசாரணைக்கு இதை மாற்ற உத்தரவிடலாம் என்று சால்வே பதிலளித்தார்.
அப்போது தலைமை நீதிபதி குறுக்கிட்டு, சால்வே.. உங்கள் மீது எங்களுக்கு நிறைய மதிப்பு உள்ளது. மாநில அரசு இதில் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன். இது மிகவும் துரதிருஷ்டவசமான சம்பவம் என்பதை மாநில அரசு கவனத்தில் எடுத்திருக்கும் என்று நம்புகிறேன். ஆனால், சிபிஐ இதற்கு தீர்வு கிடையாது என்று நம்புகிறோம். அதற்கான காரணம் உங்களுக்கே தெரியும். சில நபர்கள் இதற்கு காரணம். எனவே வேறு நபர் இதை கவனிக்கட்டும். இவ்வாறு தலைமை நீதிபதி தெரிவித்தார்.
மத்திய அமைச்சர்அஜய் மிஸ்ராவுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தியபோதுதான் காரை ஏற்றி கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணியில், அஜய் மிஸ்ரா மகன் இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. அவர் தலைமறைவாக உள்ளார். இந்த நிலையில், சிலர் என்று குறிப்பிட்டு சிபிஐ விசாரணை தேவையில்லை என்று தெரிவித்துள்ளார் தலைமை நீதிபதி.
மேலும் இந்த வழக்கின்போது நடைபெற்ற காரசார விவாதம்:
சால்வே: தயவுசெய்து இந்த வழக்கை 18 ஆம் தேதி எடுத்துக் கொள்ளுங்கள். மிக உயர்ந்த மட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது
தலைமை நீதிபதி: விவசாயிகள் படுகொலை விவகாரத்தில் உத்தரபிரதேச அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் திருப்தி இல்லை. பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறுகிறீர்கள் அவை அனைத்தும் அறிக்கையில் மட்டும்தான் உள்ளதே தவிர செயல்பாட்டில் இருப்பதாக தெரியவில்லை: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நடவடிக்கை என்பது வார்த்தைகளில் மட்டுமே. நாம் மக்களுக்கு அனுப்பும் செய்தி என்ன?
சால்வே: அமைச்சர் மகன் ஆஷிஸ் மிஷ்ரா இன்று நேரில் ஆஜராகவில்லை நாளை காலை 11 மணி வரை அவருக்கு அவகாசம் வழங்கி உள்ளோம் ஆஜர் ஆகவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். எதுவும் நடக்கவில்லை என்றால் கைது வாரன்ட் பிறப்பிக்கப்படும் என்று உ.பி. அரசு கூறியுள்ளது.
தலைமை நீதிபதி: கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டால் குற்றம் சாட்டப்பட்டவர் (மத்திய அமைச்சர் மகன்) உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். விவசாயிகள் படுகொலையில் முக்கியமான குற்றஞ்சாட்டப்பட்டவரை இன்னும் கைது செய்யாமல் ஆஜராகுங்கள் என கெஞ்சி கொண்டிருக்கிறீர்கள். ஒரு சாதாரணமானவரை நீங்கள் இப்படித்தான் கையாண்டிருப்பீர்களா?
இவ்வாறு வாத விவாதங்கள் நடைபெற்றன.












Click it and Unblock the Notifications