தேர்தல் நடத்தை விதியில் திருத்தம்! காங்., வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
டெல்லி: தேர்தல் நடத்தை விதிகள் 1961ல் மத்திய அரசு சமீபத்தில் திருத்தம் மேற்கொண்டது. இதனை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம் மத்திய அரசு, தேர்தல் ஆணையம் சார்பில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நம் நாட்டில் நடைமுறையில் உள்ள தேர்தல் சார்ந்த நடவடிக்கைகளை மாற்றம் செய்வதில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது. அந்த வகயைில் மத்திய அரசு சார்பில் சமீபத்தில் தேர்தல் நடத்தை விதிகள் 1961ல் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.

அதாவது இந்திய தேர்தல் நடத்தை விதி 1961 விதி 93ல் திருத்தம் செய்யப்பட்டது. இந்த திருத்தம் காரணமாக பொதுமக்கள் தேர்தல் சார்ந்த மின்னணு ஆவணங்களை ஆய்வு செய்வது கட்டுப்படுத்தப்படும்.
இன்னும் புரியும் படி கூற வேண்டும் என்றால் வேட்பாளரின் வேட்புமனுக்கள், தேர்தல் முகவர்கள் நியமனம், தேர்தல் முடிவுகள், செலவு கணக்குகள் போன்ற விதிகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆவணங்கள் மட்டுமே பொது ஆய்வுக்கு கிடைக்கும். சிசிடிவி கேமரா, வெப்காஸ்டிங் காட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் வீடியோ பதிவுகள் போன்ற சில மின்னணு ஆவணங்கள் பொது ஆய்வுக்கு இனி கிடைக்காது.
இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்திய தேர்தல் ஆணையத்தின் ஒருமைப்பாட்டை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அழிப்பதாக குற்றம்சாட்டியது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மத்திய அரசின் இந்த தேர்தல் நடத்தை விதி திருத்தத்தை எதிர்த்து தான் இந்த வழக்கு தொடரப்பட்டது. ஜெய்ராம் ரமேஷ் சார்பில் டிசம்பர் 24ம் தேதி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. அப்போது காங்கிரஸ் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் அபிசேக் மான்வி சிங்வி உள்ளிட்டவர்கள் ஆஜராகினர். அப்போது வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்று கூறினர். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கை மார்ச் 17 ம் தேதி தொடங்கும் வாரத்தில் இருந்து விசாரிப்பதாக உத்தரவிட்டனர். மேலும் அதற்கு முன்பாக மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையம் சார்பில் வழக்கு தொடர்பாக பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications