ராகுல் காந்திக்கு சிக்கலா?10 ஆண்டு சிறை- லட்சத்தீவு எம்.பி வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவால் பரபரப்பு!
டெல்லி: கொலை முயற்சி வழக்கில் லட்சத்தீவு எம்.பி. முகமது பைசலுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பை நிறுத்தி வைத்த கேரளா உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது. அதேநேரத்தில் முகமது பைசல் எம்.பி. என்பதால் அவருக்கான சலுகைகள் தொடரும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
லட்சத்தீவு லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முகமது பைசல். கொலை முயற்சி வழக்கில் முகமது பைசலுக்கு லட்சத்தீவு கவரொட்டி நீதிமன்றம் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

10 ஆண்டு சிறை தன்டனை விதிக்கப்பட்டதால் பைசல் எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். பைசல் எம்பி பதவி பறிக்கப்பட்டதைத் தொடர்ந்து லட்சத்தீவு லோக்சபா தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் லட்சத் தீவு தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கையும் வெளியிடப்பட்டது. அதேநேரத்தில் முகமது பைசல் எம்பிக்கு கவரொட்டி நீதிமன்றம் விதித்த 10 ஆண்டு சிறை தண்டனைக்கு கேரளா உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதனால் லட்சத்தீவு லோக்சபா தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றது.
மேலும் முகமது பைசலுக்கு விதித்த தண்டனைக்கு கேரளா உயர்நீதிமன்றம் தடை விதித்து 2 மாதங்களாகியும் அவரது எம்பி பதவி தகுதி நீக்க உத்தரவு வாபஸ் பெறப்படாமல் இருந்தது. இது தொடர்பாக முகமது பைசல் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வருவதற்கு சற்று முன்னதாக முகமது பைசல் எம்பி பதவியை பறித்த, தகுதி நீக்க உத்தரவை லோக்சபா செயலகம் வாபஸ் பெற்றது.
இந்நிலையில் முகமது பைசலுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை கேரளா உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், முகமது பைசலுக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்த கேரளா உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து இன்று உத்தரவிட்டது. இருப்பினும் முகமது பைசல், எம்.பி. என்பதால் அவருக்கான சலுகைகள் தொடரும் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். அத்துடன் கேரளா உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் 6 வாரங்களுக்குள் மறு ஆய்வு செய்து விசாரணை நடத்தவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை பெற்றார். அவரது வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்றது. உச்சநீதிமன்றம் ராகுல் காந்திக்கான 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்ததால் அவரது எம்பி பதவி மீண்டும் கிடைத்தது. முகமது பைசல் வழக்கில் இன்றைய தீர்ப்பு ராகுல் காந்தி வழக்கில் எதிரொலிக்குமா? என்கிற விவாதம் தொடங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications