விவாகரத்து வழக்கு! தந்தையுடன் செல்ல ரூ 1 கோடி கேட்ட 12 வயது சிறுமி! தாயை கண்டித்த உச்சநீதிமன்றம்!
டெல்லி: விவாகரத்து வழக்கில், தந்தையுடன் செல்ல வேண்டுமென்றால், தன் தாயைக் கொடுமைப்படுத்தியதற்காக ரூ. 1 கோடி தர வேண்டும் என 12 வயது சிறுமி கேட்டதை அடுத்து, உச்சநீதிமன்றம் சிறுமியின் தாயைக் கண்டித்துள்ளது. மேலும், தேவையின்றி குழந்தையின் மனநிலையைக் கெடுப்பதாகத் தாய் மீது குற்றம்சாட்டியது.
பொதுவாகக் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு வருவது இயற்கைதான். இவை தானாக சரியாகும். இல்லாவிட்டால் உற்றார், உறவினர் சரி செய்துவிடுவார்கள். குழந்தைகளுக்காக எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு ஒன்றாக இருக்கச் சிலர் முடிவெடுப்பார்கள்.

இவை எதுவுமே நடக்காமல் விவாகரத்துதான் முடிவு எனத் தம்பதி முடிவெடுத்திருந்தால், அவர்கள் நீதிமன்றத்தை அணுகி விவாகரத்து கோருவது வழக்கம். குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்குகள் தேங்கிக் கிடப்பதாகச் சமூக ஆர்வலர்களும் நீதித்துறையினரும் வேதனை தெரிவித்து வருகிறார்கள்.
உச்சநீதிமன்றம்
அந்த வகையில், உச்சநீதிமன்றத்தில் நீண்டகாலமாக நிலுவையில் இருந்து வந்த விவாகரத்து வழக்கில் சிறுமி கேட்ட கேள்விக்கு அவருடைய தாயை நீதிபதிகள் கடிந்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது. கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து இருவரும் குடும்ப நல நீதிமன்றத்தை நாடினர்.
12 வயது மகள்
அப்போது இவர்களது 12 வயது மகள், தந்தையுடன் செல்ல மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இதை எதிர்த்து அந்தச் சிறுமியின் தாய், உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீண்ட காலமாக விசாரணையில் இருந்து வருகிறது.
குழந்தையை ஒப்படைக்காத தாய்
இதையடுத்து தனது குழந்தையைத் தன்னிடம் ஒப்படைக்காததால், அவருடைய மனைவி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை, கணவர், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
12 வயது மகள்
இதையடுத்து தனது 12 வயது மகளைத் தன்னிடம் ஒப்படைக்க உத்தரவிடக் கோரி, தந்தை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், வினோத் சந்திரன் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
குச்சியால் தாக்கிய சிறுமி
அப்போது தந்தை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பட்வாலியா, "குழந்தையை அழைக்கத் தந்தை சென்றபோது அவருடன் வரச் சிறுமி மறுத்துவிட்டார். மாறாக, அந்தச் சிறுமி, 'நீங்கள் என் அம்மாவைத் துன்புறுத்தினீர்கள். அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போட்டிருக்கிறீர்கள். ரூ. 1 கோடி தந்தால்தான் உங்களுடன் வருவேன். இல்லாவிட்டால் வரமாட்டேன்' எனக் கூறிவிட்டாள்.
குழந்தையை தூண்டி விடுவதா
12 வயதுக் குழந்தைக்கு இப்படிப் பேச எப்படித் தெரியும்? இதையெல்லாம் சொல்லிக்கொடுத்துப் பணம் கேட்கச் சொன்னது அவருடைய தாய்தான். குழந்தையின் பள்ளிப் பதிவேடுகளில் தந்தையின் பெயரையும் தாய் நீக்கியுள்ளார். எனவே, இந்த வழக்கில் ஒரு மத்தியஸ்தரை நியமிக்க வேண்டும்" என மூத்த வழக்கறிஞர் வாதிட்டார்.
மனதை கெடுத்த தாய்
தாயின் வழக்கறிஞரும் மத்தியஸ்தரை நியமிக்கக் கோரினார். இந்த வழக்கு தொடர்பாக நீதிபதிகள் கூறுகையில், "இந்த விவகாரத்தில் தேவையே இல்லாமல் குழந்தையின் மனதை தாய் கெடுத்துள்ளது தெரிகிறது. வழக்கு தொடர்பான விசாரணையில் ஒரு கட்டத்தில் அந்தச் சிறுமி, தன் தந்தையைக் குச்சியால் தாக்கியதும் தெரியவருகிறது."
இதே நிலைதான் உங்களுக்கும்
"இந்த விவகாரத்தில் தேவையே இல்லாமல் தனது குழந்தையின் மனதைத் தாய் கெடுக்கக் கூடாது. இன்று தந்தைக்கு அந்தச் சிறுமி செய்வது (குச்சியால் தாக்கியது), நாளை தாய்க்குத் திரும்ப வாய்ப்புள்ளது. இரு தரப்பினரையும் மத்தியஸ்தத்துக்குப் பரிந்துரைப்பது பொருத்தமானது" எனத் தெரிவித்தனர்.
உத்தரவு என்ன
அதன்படி, இந்த வழக்கில் உத்தரகண்ட் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரிது பஹ்ரி மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டுள்ளார். இரு தரப்புக்குமான பிரச்சனைகளை அவரே பரிசீலனை செய்து தீர்த்து வைப்பார். இவ்வாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications