தேர்தல் பத்திரம் ரத்து- அரசை கணக்கு கேட்க உரிமை உண்டு- உச்சநீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு என்ன?
டெல்லி: மத்தியில் ஆளும் பாஜக அரசு 2018-ல் அறிமுகப்படுத்திய தேர்தல் பத்திரம் திட்டம் முறையே செல்லாது என உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
2018-ம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதியிட்ட தேர்தல் பத்திரத் திட்டத்தின்படி, தேர்தல் பத்திரங்களை இந்தியக் குடிமகனாக இருக்கும் நபர் அல்லது இந்தியாவில் இணைக்கப்பட்ட அல்லது நிறுவப்பட்ட ஒரு நபர் வாங்கலாம். ஒரு நபர் தனியாகவோ அல்லது பிற நபர்களுடன் கூட்டாகவோ தேர்தல் பத்திரங்களை வாங்க முடியும்.

தேர்தல் பத்திர திட்டத்தின் விதிமுறைகள்படி, இந்தியக் குடிமகன் அல்லது இந்தியாவில் ஒருங்கிணைக்கப்பட்ட அல்லது நிறுவப்பட்ட ஒரு நபர் (அரசிதழ் அறிவிப்பின் பிரிவு எண். 2 (டி ) இல் வரையறுக்கப்பட்டுள்ளபடி) தேர்தல் பத்திரங்களை வாங்கலாம். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 (43 இன் 1951) பிரிவு 29ஏ -இன் கீழ் பதிவு செய்யப்பட்ட, கடந்த பொதுத் தேர்தலில் மக்களவைக்கோ அல்லது சட்டமன்றத்திற்கோ மாநிலத்தின் மொத்த வாக்குகளில் ஒரு சதவீதத்திற்கும் குறையாத வாக்குகளைப் பெற்ற அரசியல் கட்சிகள் மட்டுமே, தேர்தல் பத்திரங்களைப் பெற தகுதியுடையவையாகும் தேர்தல் பத்திரங்கள் அங்கீகரிக்கப்பட்ட வங்கியில் உள்ள வங்கிக் கணக்கு மூலம் மட்டுமே தகுதியான அரசியல் கட்சியால் பணமாக்க முடியும்.
ஆனால் இந்த தேர்தல் பத்திர திட்டமானது வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருக்கிறது; அரசியல் கட்சிகளுக்கு யார் பணம் கொடுக்கிறார்கள் என அறியும் உரிமையை மறுக்கிறது என்பது உள்ளிட்ட பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி, அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் இந்த தேர்தல் பத்திரம் திட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் இன்று தேர்தல் பத்திர முறையை ரத்து செய்து அதிரடி தீர்ப்பளித்தது. மேலும் அரசை கேள்வி கேட்கிற உரிமை மக்களுக்கு உண்டு எனவும் உச்சநீதிமன்றம் தமது தீர்ப்பில் அழுத்தம் திருத்தமாக தெரிவித்தது.
உச்சநீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பின் சில முக்கிய அம்சங்கள்:
தேர்தல் பத்திரங்கள் திட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது
தேர்தல் பத்திரங்கள் திட்டங்கள் செல்லாது
தேர்தல் பத்திரங்கள் வாக்காளர்களது உரிமையை பறிக்கிறது
தேர்தல் பத்திரங்கள் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுகிறது
தேர்தல் பத்திரங்கள் திட்டமானது தகவல் அறியும் உரிமை சட்டத்துக்கும் எதிரானது.
தேர்தல் பத்திரங்கள் அரசியல் சாசனத்தின் 19(1)(a) -க்கு எதிரானது.
தேர்தல் பத்திரங்கள் திட்டம் மட்டுமே கறுப்பு பணத்தை ஒழிக்க உதவாது.
அரசை கேள்வி கேட்கும் உரிமை மக்களுக்கு உண்டு.
பாரத ஸ்டேட் வங்கி, தேர்தல் பத்திரங்களை வழங்குவதை உடனே நிறுத்த வேண்டும்
தேர்தல் பத்திரங்கள், தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை கொடுத்தவர்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் பாரத ஸ்டேட் வங்கி மார்ச் 6-ந் தேதிக்குள் பகிரங்கப்படுத்த வேண்டும்.
தேர்தல் பத்திரம் திட்டத்துக்காக கம்பெனிகள் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது சட்டவிரோதம்.
தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை கொடுத்தோர் விவரங்களை அறிய முடியாது என்பது வாக்காளர்களின் அடிப்படை உரிமையை மீறுவதாகும்.
இவ்வாறு உச்சநீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications