கேட்ட கேள்விக்கு நேரா பதில் சொல்லுங்க.. செந்தில் பாலாஜி வழக்கில் ED-யை துளைத்தெடுத்த சுப்ரீம் கோர்ட்
டெல்லி: செந்தில் பாலாஜி ஜாமீன் மனு விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், அமலாக்கத்துறைக்கு சரமாரியாக கேள்விகளை எழுப்பி உள்ளனர் நீதிபதிகள். அமலாக்கத்துறை பதில் அளிக்கத் திணறிய நிலையில், நாளை பதிலோடு வாருங்கள் எனக் கூறி விசாரணையை ஒத்தி வைத்துள்ளது சுப்ரீம் கோர்ட்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளார். ஜாமின் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்களை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

செந்தில் பாலாஜியின் இந்த மனு கடந்த திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் இருந்து உடனே விடுவிக்கக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது. உடல்நிலை பாதித்த நிலையில் செந்தில்பாலாஜி தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமலாக்கத் துறை என்ன விசாரிக்கிறார்கள், எப்போது விசாரிப்பார்கள் என்று தெரியவில்லை என வாதிட்டனர்.
எப்போது விசாரித்து முடிவு எடுப்பார்கள் என்பது கடவுளுக்குதான் தெரியும். செந்தில் பாலாஜி உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை செந்தில் பாலாஜி தரப்பில் முன்வைக்கப்பட்டது. அப்போது, அமலாக்கத்துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் இல்லாததால் வழக்கை வேறு நாளுக்கு மாற்றி வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து இன்றைய தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள், முதலில் இந்த வழக்கு தொடர்பாக கைப்பற்றப்பட்ட பென்டிரைவ் போன்றவற்றில் தனக்கு எதுவும் சம்பந்தம் இல்லை என்று செந்தில் பாலாஜி தரப்பு கூறுகிறது, அது குறித்து முதலில் உங்கள் பதில் என்ன? என அமலாக்கத்துறைக்கு கேள்வி எழுப்பினர்.
அதற்கு, பென் டிரைவ் கைப்பற்றப்பட்டதில் தனது பங்களிப்பு இல்லை என செந்தில் பாலாஜி கூறுவதை ஏற்க முடியாது என அமலாக்கத்துறை வாதம் வைத்தது. செந்தில் பாலாஜி வழக்கில் கைப்பற்றப்பட்ட பென் டிரைவ் போன்ற ஆவணங்கள் எங்கே? நேரடியாக கேட்கப்படும் சாதாரண கேள்விக்கு அமலாக்கத்துறையிடம் இருந்து பதில் இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.
செந்தில் பாலாஜி வழக்கில் கைப்பற்றப்பட்ட பென் டிரைவில் கூடுதல் ஆவணம் எப்படி வந்தது? பென் டிரைவில் உள்ள தரவுகள் சோதனையின் போது இல்லை என செந்தில் பாலாஜி தரப்பு கூறுகிறதே எனக் கேள்வி எழுப்பினர்.
மேலும், நீங்கள் கைப்பற்றிய டிஜிட்டல் ஆவணங்களில் செந்தில் பாலாஜி தொடர்புடைய விவரங்கள் எதில் இடம்பெற்று இருக்கிறது என்பதை முதலில் தெரியப்படுத்துங்கள். எங்களது இந்த கேள்விக்கு நீங்கள் பதில் அளிக்காமலேயே இருக்கிறீர்கள். நாங்கள் கேட்பது மிக மிக சாதாரண கேள்வி. அதற்கு நாங்கள் உங்களிடம் சுற்றி வளைக்காமல் நேரடியான சாதாரண பதிலைத் தான் எதிர்பார்க்கிறோம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், தற்போது எல்லாம் நாங்கள் வழக்கறிஞர்களிடம் கேள்வி கேட்டால் அதைத் தனிப்பட்ட முறையில் விரோதமாக எடுத்துக் கொள்கிறீர்கள். செந்தில் பாலாஜி விவகாரத்தில் கைப்பற்றப்பட்ட பென் டிரைவ் போன்ற ஆதாரங்கள் பற்றி நாங்கள் கடந்த 15 நிமிடங்களாக தெரிந்து கொள்ள முயற்சி செய்கிறோம். ஆனால் நீங்கள் அதற்கு பதில் அளிக்க மாட்டேன் என்கிறீர்கள்.
நீங்களும் நிபுணர் இல்லை.. நாங்களும் நிபுணர்கள் இல்லை. தடயவியல் நிபுணர்கள் தான் இதற்கு பதில் கூற வேண்டும். அந்த பதிலைத் தான் நாங்கள் எங்கே எனக் கேட்கிறோம் என்றும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கூறினர்.
உச்ச நீதிமன்றத்தின் சரமாரியான கேள்விகளுக்கு அமலாக்கத்துறை பதில் அளிக்கத் திணறிய நிலையில், இன்று பதில் வழங்க இயலவில்லை என்றால் நாளை தள்ளி வைக்கிறோம் நாளை பதிலோடு வாருங்கள் என நீதிபதிகள் தெரிவித்து, வழக்கு விசாரணையை நாளைக்கு (ஜூலை 25) ஒத்தி வைத்தனர்.
இதனையடுத்து அமலாக்கத்துறை தரப்பில் தயார் செய்யப்பட்ட குறிப்பை உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும், செந்தில் பாலாஜி தரப்புக்கும் வழங்கினர். அதற்கு செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா, "அமலாக்கத்துறை குழப்பத்தை ஏற்படுத்த முயல்கிறது" எனக் குற்றம்சாட்டினார்.












Click it and Unblock the Notifications