மணிப்பூர் வன்முறையை அதிகரிக்க உச்சநீதிமன்றம் என்ன ஆடுகளமா? தலைமை நீதிபதி காட்டம்!
டெல்லி: மணிப்பூர் மாநிலத்தில் நிகழும் வன்முறைகளை அதிகரிக்க உச்சநீதிமன்றத்தை ஒரு வாய்ப்பாக, ஆடுகளமாக பயன்படுத்துவதா? என தலைமை நீதிபதி சந்திரசூட் அதிருப்தி தெரிவித்தார்.
நாட்டின் வடகிழக்கு மாநிலங்கலில் ஒன்றான மணிப்பூரில் மைத்தேயி- குக்கி இனக்குழுக்களிடையேயான மோதல் 2 மாதங்களுக்கும் மேலாக நீடிக்கிறது. இம்மோதல்களில் 200 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். 50,000-க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்து அகதிகளாக முகாம்களிலும் பிற மாநிலங்களிலும் தஞ்சமடைந்துள்ளனர்.

மணிப்பூர் வன்முறைகளைக் கட்டுப்படுத்தும் வகையில் 2 மாதங்களாக இணையசேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இத்தடையை நீக்க கோரி மணிப்பூர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த மணிப்பூர் உயர்நீதிமன்றம், இணையசேவைகளை பாதி அளவு தொடர்ந்து வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசுக்கு உத்தரவிட்டது.
மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மாநில அரசு மனுத் தாக்கல் செய்துள்ளது. இம்மனுவை உச்சநீதிமன்றம் நாளை விசாரித்து உத்தரவு பிறப்பிக்க உள்ளது.
ஆடுகளம் அல்ல: இதனிடையே மணிப்பூர் மாநில வன்முறைகள் தொடர்பான பொதுநலன் வழக்குகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் இன்று விசாரித்தது. இன்றைய விசாரணையின் போது மணிப்பூர் நிலவரம் தொடர்பான மாநில அரசின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, உச்சநீதிமன்றத்தை மணிப்பூர் வன்முறைகளை அதிகரிக்க பயன்படுத்தக் கூடாது. மாநில அரசு எடுக்கிற நடவடிக்கைகளைநாங்கள் கணிக்க முடியும். அதனடிப்படையில் சில உத்தரவுகளை பிறப்பிக்க முடியும். மணிப்பூர் பிரச்சனையை மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும்; இதை பிரித்து பார்க்க வேண்டாம் என்றார் தலைமை நீதிபதி சந்திரசூட். மேலும் மணிப்பூர் விவகாரத்தில் ஆக்கப்பூர்வமான யோசனைகளுடன் மனுதாரர்கள் வர வேண்டும் என்றும் தலைமை நீதிபதி அறிவுறுத்தினார். மேலும் உச்சநீதிமன்றமானது மாநில சட்டம் ஒழுங்கு விவகாரத்தை கையில் எடுக்க முடியாதுவும் எனவும் சுட்டிக்காட்டினார்.












Click it and Unblock the Notifications