அதானி குழுமம் தொடர்பான செய்திகளை வெளியிட தடையா? உச்சநீதிமன்றத்தில் நாளை மறுநாள் விசாரணை
அதானி குழுமங்கள் தொடர்பான வழக்கு விசாரணை பிப்ரவரி 10-ல் நடைபெற உள்ளது.
டெல்லி: அதானி குழுமம் தொடர்பான செய்திகளை வெளியிட தடை கோரும் வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை மறுநாள் விசாரணை நடத்துகிறது.
அதானி குழும நிறுவனங்கள் மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பங்குச் சந்தைகள் மற்றும் அரசியல் பெரும் கொந்தளிப்புக்கு காரணமாகிவிட்டது ஹிண்டன்பர்க் அறிக்கை.

அதானி குழும விவகாரத்தால் நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் எதிர்க்கட்சிகளால் முடக்கப்பட்டுள்ளன. அதானி குழுமத்துக்கும் மத்திய பாஜக அரசுக்கும், பிரதமர் மோடிக்குமான தொடர்புகள் குறித்து எதிர்க்கட்சிகள் சரமாரியாக கேள்வி எழுப்புகின்றன.
இதனிடையே செபியின் அனுமதி இல்லாமல் அதானி குழுமத்தின் செய்திகளை ஊடகங்கள் வெளியிட தடை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மூத்த வழக்கறிஞர் சர்மா இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.
மூத்த வழக்கறிஞர் எம்.எல்.சர்மா தமது மனுவில், ஊடகங்கள் மிகையான செய்திகளை வெளியிடுகின்றன. இதனால் நாட்டின் பங்கு சந்தை வர்த்தகம் மிக மோசமாக பாதிப்படைகிறது. பங்கு சந்தையில் அச்சம் காரணமாக முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்வதால் நிதி இழப்பு ஏற்படுகிறது.
ஆகையால் நீதித்துறை இதில் தலையிட வேண்டும். செபியின் அனுமதி இல்லாமல் ஊடகங்கள் அதானி குழும செய்திகளை வெளியிட தடை விதிக்க வேண்டும். இப்படி ஒரு அறிக்கை வெளியிட்ட அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த மனு மீது நாளை மறுநாள் விசாரணை நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications