ராமர் பாலம் வழக்கு.. விடாமல் வரும் சு.சுவாமி.. விசாரணைக்கு பட்டியலிடுவதாக உச்சநீதிமன்றம் உறுதி!
ராமர் பாலத்தை நினைவுச் சின்னமாக அறிவிக்கக்கோரிய மனுவை விசாரணைக்கு பட்டியலிடுவதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
டெல்லி: ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கக் கோரி சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுவை விரைவில் விசாரணைக்கு பட்டியலிடுவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தியை இணைக்க கூடிய மணற்திட்டுகள் அல்லது சுண்ணாம்பு பாறைகள் ஒரு தொடர்ச்சியாக இருக்கின்றன. இது ஒரு பாலம் போன்ற தோற்றத்தைக் கொண்டது. இதுதான் ஆடம் பாலம், ஆதாம் பாலம், ராமர் பாலம் என அழைக்கப்படுகிறது.
பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாக நம்பப்படுகிற கடவுள் ராமர் கட்டிய பாலம் இது என்பது இந்துக்களின் நம்பிக்கை. இந்த நிலையில் தமிழ்நாட்டில், இந்த மணற்திட்டு பகுதியை ஆழப்படுத்தி கப்பல் போக்குவரத்துக்கு வழி ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை 150 ஆண்டுகளாக இருந்து வருகிறது.

சேது சமுத்திரம் திட்டம்
இந்த கால்வாய்தான் சேது கால்வாய் அல்லது சேது சமுத்திர திட்டம் எனப்படுகிறது. சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முயற்சித்தது. ஆனால் அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள், ராமர் கட்டிய பாலத்தை இடித்து சேது கால்வாய் திட்டத்தை செயல்படுத்துவதா? என கொந்தளித்தன. 2014-ல் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த நிலையில் சேது கால்வாய் திட்டம் கைவிடப்பட்டது.

தமிழ்நாடு அரசு தீர்மானம்
அப்போது, ராமர் பாலத்தை நினைவுச் சின்னம் என அறிவிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி வழக்கும் தொடர்ந்தார். இந்த வழக்கு நீண்டகாலமாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது. இந்த நிலையில் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் ராமர் பாலம் இருந்ததற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என அறிவித்தது. இதனடிப்படையில் தமிழ்நாடு அரசு, சேது கால்வாய் அல்லது சேது சமுத்திர திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது.

மத்திய அரசின் பதில்
இப்பின்னணியில் ஜனவரியில் உச்சநீதிமன்றத்தில் ராமர் பாலம் தொடர்பான சுப்பிரமணியன் சுவாமியின் மனு மீது நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ராமர் பாலத்தை நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை மீது பரிசீலனை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக விரைவில் முடிவெடுக்கப்படும் என உறுதியளித்தார்.

உச்சநீதிமன்றம் உத்தரவு
இதனை சுப்பிரமணியன் சுவாமி தரப்பு ஏற்க மறுத்தது. ஆனால் மத்திய அரசின் உறுதிமொழியை ஏற்று வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைப்பதாக அறிவித்தது. மத்திய அரசு, இதில் முடிவு எடுக்காவிட்டால் சுப்பிரமணியன் சுவாமி தரப்பு மீண்டும் நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மீண்டும் ஆஜாரான சுப்பிரமணியன் சுவாமி
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் நேற்று தலைமை நீதிபதி சந்திரசூட் பெஞ்ச் முன் சுப்பிரமணியன் சுவாமி மீண்டும் ஆஜரானார். ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிப்பது குறித்த விவகாரத்தில் மத்திய அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று தெரிவித்தார். இதன் பின்னர் தலைமை நீதிபதி சந்திரசூட், இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications