புதிய நாடாளுமன்ற கட்டிடம்.. ஜனாதிபதி திறந்து வைக்கக் கோரி மனு.. நாளை விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்
டெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசு தலைவர் திரவுபதி முர்வு திறந்து வைக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது.
இந்திய ஜனநாயகத்தின் கோவில் என்று வர்ணிக்கப்படுவது நமது நாட்டின் நாடாளுமன்றம். டெல்லியில் தற்போது இருக்கும் நாடாளுமன்ற கட்டிடம் 96 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த நாடாளுமன்ற கட்டிடம் தற்போதைய காலத்திற்கு ஏற்ற வகையில் இல்லாததால் புதிய நாடாளுமன்றம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது.

இதன்படி, கடந்த 2019 ஆம் ஆண்டு பிரதமர் மோடி புதிய நாடாளுமன்றம் கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டினார். கொரோனா கால கட்டத்திலும் இந்த பணிகள் முழு வீச்சில் நடைபெற்றது. தற்போது நாடாளுமன்றம் கட்டும் பணிகள் முடிந்த நிலையில்புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை வரும் 28 ஆம் தேதி பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
சாவர்க்கர் பிறந்த நாளில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்படுவதாக ஒரு சர்ச்சை ஏற்கனவே கிளம்பியிருந்த நிலையில், தற்போது பிரதமர் மோடி திறந்து வைப்பதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. நாட்டின் குடியரசு தலைவர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைப்பதே பொருத்தமாக இருக்கும் என்பது எதிர்க்கட்சிகளின் வாதமாக உள்ளது.
பிரதமர் மோடி திறந்து வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 19 எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற கட்டிடம் திறக்கும் விழாவை புறக்கணிக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளன. இதற்கிடையே, நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசு தலைவர் திறந்து வைக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜெ.கே மகேஷ்வரி, பி.எஸ் நரசிம்ஹா அமர்வு நாளை இந்த வழக்கை விசாரிக்க உள்ளது.












Click it and Unblock the Notifications