"சனாதன சர்ச்சை.." விசாரணை தாராளமாக நடக்கட்டும்.. நாங்கள் தடை கோரவே இல்லை.. உதயநிதி தரப்பு பரபர வாதம்
டெல்லி: சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்குக் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பி இருந்த நிலையில், இது குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.
கடந்தாண்டு சென்னை காமராஜர் அரங்கில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. அதில் திமுக இளைஞர் அணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.

அங்கே உதயநிதி பேசிய பேச்சு மிகப் பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. அந்தக் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி சனாதனம் குறித்துப் பேசியிருப்பார். அதுவே சர்ச்சைக்குக் காரணம்.
உதயநிதி: அந்த மாநாட்டில் பேசிய உதயநிதி, "இந்த மாநாட்டின் தலைப்பைச் சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல்.. 'சனாதன ஒழிப்பு மாநாடு' என்று போட்டுள்ளார்கள்.. சில விஷயங்களை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா ஆகியவற்றை நாம் எதிர்க்கக் கூடாது. அவற்றை ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித் தான் இந்த சனாதனம்.
சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்... சனாதனம் என்றால் என்ன? சனாதனம் என்பது சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது. சனாதனம் என்றால் நிலையானது.. மாற்ற முடியாதது. யாரும் கேள்வி கேட்க முடியாது என்று அர்த்தம்.. ஆனால் எதுவுமே நிலையானது கிடையாது.. நாம் அனைத்தையும் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக உருவான இயக்கம்தான் இடதுசாரிகளும் திமுகவும்" என்று உதயநிதி அந்த மாநாட்டில் பேசி இருந்தார்.
வழக்கு: அவரது அந்த பேச்சு மிகப் பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. இதையடுத்து உதயநிதி பேச்சு குறித்து நாட்டில் பல்வேறு மாநிலங்களிலும் புகார் அளிக்கப்பட்டது. இருப்பினும், எத்தனை வழக்குகள் போட்டாலும் அதை எதிர்கொள்ளத் தயார் என்றே உதயநிதி தொடர்ந்து கூறி வந்தார். பல்வேறு மாநிலங்களிலும் உதயநிதிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்ட நிலையில், அந்த அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் உதயநிதி மனுத்தாக்கல் செய்தார்.
இன்று விசாரணை: கடந்த முறை இந்த மனு விசாரணைக்கு வந்த போது, கருத்துச் சுதந்திர உரிமையைத் துஷ்பிரயோகம் செய்துவிட்டு, தற்போது பிரிவு 32-ன் கீழ் பாதுகாப்பு கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளீர்கள் என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் காட்டமான கருத்துகளைக் கூறினர். மேலும், "நீங்கள் சாதாரண நபர் அல்ல. ஒரு மாநில அமைச்சர். உங்கள் பேச்சு எந்த அளவுக்குத் தாக்கம் ஏற்படுத்தும் என்று நன்கு தெரிந்திருக்க வேண்டும்" என்று காட்டமான கருத்துகளைக் கூறியிருந்தார்.
உத்தரவு: இந்தச் சூழலில் தான் சனாதன சர்ச்சை தொடர்பான உதயநிதியின் வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உதயநிதி தரப்பு, "வழக்குகளை ஒரே இடத்தில் விசாரிக்க வேண்டும் எனக் கோருகிறோமே தவிர, விசாரணைக்குத் தடை கோரவில்லை. ஏற்கனவே 5 மாநிலங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்குகள் ஒரே இடத்தில் மாற்றாவிட்டால் அது குழப்பத்தைத் தான் ஏற்படுத்தும்" என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தனர். அதாவது வழக்குகளை ஒரே இடத்தில் விசாரிக்கக் கோரி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவில் தேவையான மாற்றங்களைச் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது. அரசியல் சாசன பிரிவு 32இன் கீழ் மனுத்தாக்கல் செய்ததை ஏற்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், ரிட் மனுவில் தேவையான மாற்றங்களை 3 வாரக் காலத்தில் மேற்கொள்ள அறிவுறுத்தினர். இதையடுத்து வழக்கு விசாரணையை மே 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications