ஒரே பாலின திருமணத்துக்கு அங்கீகாரம் கோரும் வழக்கு- அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றியது உச்சநீதிமன்றம்!
ஒரே பாலின திருமண அங்கீகார வழக்கு அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றப்பட்டுள்ளது.
டெல்லி: ஒரே பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் கோரும் வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சுக்கு உச்சநீதிமன்றம் அதிரடியாக மாற்றி உத்தரவிட்டுள்ளது.
நாட்டின் பல மாநிலங்களில் ஒரே பாலின திருமணங்களுக்கு அதாவது ஓரின சேர்க்கை திருமணங்களுக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் வழங்க கோரும் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்தப் பொதுநல வழக்குகள் அனைத்தையும் தாமாக முன்வந்து உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் முன்பாக இந்த வழக்கு விசாரணையில் இருந்தது.

இவ்வழக்கில் மத்திய அரசு மிக முக்கியமான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்திருந்தது. மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டிருந்ததாவது: ஓரினச் சேர்க்கை அல்லது ஒரே பாலின உறவு விவகாரம் குற்றம் அல்ல என்பது 2021-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு. அதற்காக ஒரே பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் கோர முடியாது.
பொதுவாக நமது இந்தியாவின் திருமண சட்டங்கள் அல்லது மதம் சார்ந்த தனிநபர் சட்டங்கள் என்பவை ஆணும் பெண்ணும் இணைவதுதான் திருமண பந்தம் என்பதை வரையறுக்கிறது. இந்த திருமண பந்தமே புனிதமானது எனவும் கருதப்படுகிறது. திருமணம் சார்ந்த சட்டங்கள் எதுவுமே ஒரே பாலின திருமணத்தை அங்கீகரிக்கவும் இல்லை- அதை பற்றி பேசவுமே இல்லை.
இந்திய கலாசாரம், பண்பாடு என்பதும் ஆண்- பெண் இணைந்த திருமண உறவைத்தான் முன்வைக்கின்றன. இதுதான் சமூக மதிப்புக்குரிய அம்சமாகவும் இருக்கிறது.
இத்தகைய சூழ்நிலையில் ஒரே பாலினத்தவர் அல்லது ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணங்களுக்கு அங்கீகாரம் அல்லது சட்டப்பூர்வமான அனுமதி வழங்குதல் என்பது சமூகத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும். சட்டம், சமூக ரீதியாக பல பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். இத்தகைய சலுகைகள், அங்கீகாரங்களை நீதிமன்றங்களும் முடிவு செய்ய முடியாது. நாட்டின் சட்டங்களை இயற்றுகிற நாடாளுமன்றம்தான் தீர்மானிக்கும். இவ்வாறு மத்திய அரசு தமது பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து இவ்வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. இவ்வழக்கு விசாரணைகள் அனைத்தும் 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் ஏப்ரல் 18-ந் தேதி முதல் இவ்வழக்கு விசாரணை நடைபெறும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications