பொன்முடி வழக்கு: ஆளுநர் ரவிக்கு நாளை வரை கெடு.. முடிவெடுக்காவிட்டால்... உச்சநீதிமன்றம் எச்சரிக்கை!
டெல்லி: திமுக எம்.எல்.ஏ. பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்கும் விவகாரத்தில் ஆளுநர் ரவி நாளைக்குள் முடிவெடுக்க வேண்டும்; ஆளுநர் ரவி நாளைக்குள் முடிவெடுக்காவிட்டால் என்ன நடவடிக்கை பாயும் என இப்போது தெரிவிக்க முடியாது என உச்சநீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் அமைச்சராக இருந்த பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் பொன்முடி எம்.எல்.ஏ, அமைச்சர் பதவியை இழந்தார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொன்முடி மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனை உத்தரவை நிறுத்தி வைத்தது.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவால் பொன்முடியை மீண்டும் அமைச்சராக்க முதல்வர் ஸ்டாலின் பரிந்துரைத்தார். ஆனால் ஆளுநர் ரவியோ, பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க மறுத்தார். இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் இன்று ஆளுநர் ரவிக்கும் மத்திய அரசுக்கும் கடும் கண்டனங்களை தெரிவித்தது.
இன்றைய வழக்கு விசாரணையின் போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:
- பொன்முடி விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி முடிவெடுக்க நாளை வரை அவகாசம் வழங்குகிறோம்.
- பொன்முடி விவகாரத்தில் நாளைக்குள் ஆளுநர் தமது முடிவை தெரிவிக்காவிட்டால் என்ன நடவடிக்கை எடுப்போம் என இப்போது தெரிவிக்கப் போவது இல்லை
- தண்டனையை நிறுத்தி வைத்துவிட்ட பின்னர் எந்த அடிப்படையில் பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது என்கிறார் ஆளுநர் ரவி?
- பொன்முடி விவகாரத்தில் ஆளுநர் ரவி நாளைக்குள் முடிவு எடுத்து தெரிவிக்காவிட்டால் உச்சநீதிமன்றம் உரிய அரசியல் சாசன அடிப்படையிலான உத்தரவுகளைப் பிறப்பிக்க நேரிடும்.
- பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க கூறினால் அதை எப்படி அரசியல் சாசனத்துக்கு எதிரானது என ஆளுநர் கூற முடியும்?
- பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது என சொல்லும் அதிகாரத்தை ஆளுநர் ரவிக்கு யார்தான் கொடுத்தது?
- ஆளுநர் அரசியல் சாசனத்தைப் பின்பற்றவில்லை எனில் மாநில அரசு என்னதான் செய்யும்?
- நாங்கள் ஒன்றும் கண்ணை மூடிக் கொண்டிருக்கவில்லை.
- ஆளுநரின் செயல்பாடுகள் அரசியல் சாசனத்தை மீறியதாக இருக்கிறது
- ஆளுநர் ஆர்.என்.ரவி உச்சநீதிமன்றத்துடன் விளையாட வேண்டாம்
- ஆளுநர் ஆர்.என்.ரவி முடிவெடுக்காவிட்டால் அவரது செயல்பாடுகள் பற்றி உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவிக்க நேரிடும்












Click it and Unblock the Notifications