விமானங்களை மீண்டும் இயக்குங்க.. மத்திய அரசுக்கு முதல் முறையாக தாலிபான்கள் கடிதம்
டெல்லி: ஆப்கானிஸ்தானுக்கு மீண்டும் பயணிகள் விமான சேவையை தொடங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல் முறையாக தாலிபான்கள் கடிதம் அனுப்பி உள்ளனர்.
Recommended Video
ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான்கள், The Islamic Emirate of Afghanistan என அந்த நாட்டுக்கு பெயரிட்டுள்ளனர். 1996-2001 ஆட்சிக் காலம் போல் இல்லாமல் இந்த முறை தாலிபான்கள் சர்வதேச சமூகத்துடன் நல்லுறவை வளர்ப்பதில் தீவிரமாக உள்ளனர்.
அண்டை நாடுகளான இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்டவைகளுடன் தாலிபான்கள் அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்தினர். தாலிபான்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர பாகிஸ்தானும் சீனாவும் தீவிரமாக முயற்சிக்கின்றன.

தாலிபான்களின் கொடூரம்
அதேநேரத்தில் சர்வதேச அளவில், தாலிபான்கள் தொடர்ந்து மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. குழந்தைகள், சிறுவர்களை படுகொலை செய்வது, தூக்கிட்டு கொலை செய்வது என தாலிபான்களின் அட்டூழியங்கள் அடங்கவும் இல்லை. தாலிபான்களின் இந்த கொடூரங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

போர் விமானங்கள் மூலம் மீட்பு
ஆப்கானிஸ்தான் முழுவதும் தாலிபான்கள் வசமான நிலையில் சர்வதேச நாடுகள் தலைநகர் காபூலுக்கான விமான சேவைகளை ரத்து செய்தன. ஆப்கானில் சிக்கி தவித்த தங்கள் நாட்டவரை இந்தியா உள்ளிட்ட நாடுகள் போர் விமானங்கள் பாதுகாப்பான மீட்டன. இந்த போர் விமானங்களில் ஆப்கானிஸ்தானியர்களும் பெருமளவில் பயணித்தனர்.

மத்திய அரசுக்கு கடிதம்
இதனிடையே தாலிபான்கள் முதல் முறையாக மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை அதிகாரப்பூர்வமாக அனுப்பியுள்ளனர். ஆப்கானிஸ்தானின் விமானப் போக்குவரத்து துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அல்ஹாஜ் ஹமீதுல்லா அகுந்தசா, இந்திய விமானப் போக்குவரத்து துறை இயக்குநர் அருண் குமாருக்கு இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறும் போது காபூல் விமான நிலையம் கடுமையாக சேதப்படுத்தப்பட்டது. கத்தார் உதவியுடன் காபூல் விமான நிலையம் சீரமைக்கப்பட்டுள்ளது. ஆகையால் இந்திய அரசு காபூலுக்கு விமான சேவைகளை மீண்டும் இயக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அங்கீகாரம் பெற முயற்சி?
தாலிபான்களின் இந்த முயற்சியானது இந்தியா உள்ளிட்ட நாடுகளின் அங்கீகாரத்தைப் பெறும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பாகிஸ்தான் விமானங்கள் காபூலுக்கு சென்றன. இந்த நிலையில் இந்தியாவுக்கும் தாலிபான்கள் நேசக்கரம் நீட்டும் வகையில் முதல் கட்டமாக விமான சேவைகளை இயக்கும் கோரிக்கையை வைத்துள்ளனர். மத்திய அரசு இந்த கோரிக்கைக்கு என்ன பதில் அளிக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பாகும்.


Click it and Unblock the Notifications
