"அமைச்சர் பதவிக்கு போட்டா போட்டி".. விஜய் ஆஃபரால் 'லாபி'.. ராகுலை சந்தித்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள்
சென்னை: முதல்வர் விஜய் தலைமையிலான தவெகவுடன் கூட்டணி சேர்ந்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு 2 கேபினட் அமைச்சர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியில் 5 பேர் எம்எல்ஏக்களாக உள்ள நிலையில் அமைச்சர் பதவியை கைப்பற்ற அனைவரும் முயன்று வருகின்றனர். இதற்கிடையே தான் டெல்லியில் ராகுல் காந்தியை நேற்று 5 எம்எல்ஏக்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் 2 அமைச்சர் பதவி யாருக்கு கிடைக்க வாய்ப்புள்ளது என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் வென்று விஜய் முதல்வராகி உள்ளார். அவருடன் 9 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர். முன்னதாக விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும் பிற கட்சிகளின் ஆதரவில் நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்துள்ளது.

முன்னதாக காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தவெகவிற்கு ஆதரவு அளித்தது. காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏக்களும் சட்டசபையில் முதல்வர் விஜய்யின் நம்பிக்கை கோரிய தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். தமிழகத்தை எடுத்து கொண்டால் காங்கிரஸ் கட்சி 1967 க்கு பிறகு ஆட்சியை பிடிக்கவில்லை. அதுமட்டுமின்றி அமைச்சரவையிலும் இடம்பெறவில்லை.
2 அமைச்சர் பதவி
ஆனால் தற்போது காங்கிரஸ் கட்சி விஜய்யின் தவெக அமைச்சரவையில் பங்கெடுக்க முடிவெடுத்துள்ளது. இதுதொடர்பாக விஜய் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. விஜய் சார்பில் 2 அமைச்சர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதுபற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், '' காங்கிரஸ் கட்சியின் சார்பில் விஜய்யிடம் 2 அமைச்சர் பதவி கோரி உள்ளது. இந்த அமைச்சர் பதவியை கைப்பற்ற தமிழக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஒவ்வொருவரும் கட்சியின் மேலிட தலைவர்களின் ஆதரவை பெற முயற்சிக்கின்றனர். அமைச்சராகும் எம்எல்ஏக்களின் பெயர்கள் ஓரிரு நாளில் இறுதி செய்யப்படும்'' என்றார்.
டாப் 3 பெயர்கள்
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை பி விஸ்வநாதன் (மதுரை மேலூர் சட்டசபை தொகுதி), ஜமால் முகமது யூனுஸ் (மயிலாடுதுறை தொகுதி), தாரகை கத்வரட் (குளச்சல்), பிரவீன் (விளவங்கோடு), ராஜேஷ் குமார் (கிள்ளியூர்) என்று 5 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் அமைச்சர் பதவிக்கு ராஜேஷ் குமார், பி விஸ்வநாதன், தாரகை கத்வர்ட் ஆகியோரின் பெயர்கள் முன்னிலையில் உள்ளனர்.
கிறிஸ்தவ நாடார் - தலித்
இதில் ராஜேஷ் குமார் காங்கிரஸ் கட்சியின் சட்டசபை குழுத் தலைவராக இருக்கிறார். கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டசபை தொகுதியில் இருந்து 3வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். கிறிஸ்தவ நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர். அதேபோல், விஸ்வநாதன் கொறடாவாக இருக்கிறார். இவர் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர். காஞ்சிபுரம் முன்னாள் எம்பியான இவர் கடைசி நேரத்தில் மேலூர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர். ராஜேஷ் குமார், விஸ்வநாதன் ஆகியோர் காங்கிரஸ் கட்சியின் சீனியர் தலைவர்களாக உள்ளனர்.
மீனவர் சமுதாயம் + பெண் தலைவர்
மறுபுறம் தாரகை கத்பர்ட் ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். இவர் மீனவர் சமூகத்தை சேர்ந்தவர். இவர் இளம் வயதில் இருந்தே காங்கிரஸ் கட்சியின் தேசிய மாணவர் சங்கத்தில் பணியாற்றி வருகிறார். அதோடு 5 எம்எல்ஏக்களில் இவர் மட்டுமே பெண் ஆவார். இது பிளஸ் பாயிண்ட்டாகும். பெண்ணுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்றால் இவருக்கு அதிர்ஷ்டம் அடிக்கும்.
மீதமுள்ள ஜமால் முகமது யூனுஸ், பிரவீன் ஆகியோருக்கு எந்த பதவியும் வழங்கப்படவில்லை. இவர்கள் 2 பேரும் முதல் முறையாக எம்எல்ஏவாகி உள்ளனர். இவர்களும் அமைச்சர் பதவியை விரும்புகின்றனர்.
ராகுல் காந்தியுடன் சந்திப்பு
இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் 5 பேரும் டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்து பேசி உள்ளனர். தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர் உடன் இருந்தார்.
இதற்கிடையே தான் 5 காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கும், ராகுல் காந்தி முக்கிய அறிவுரையை வழங்கி உள்ளார். மாநிலத்தில் கட்சியை வலுப்படுத்த வேண்டும். மாநிலம் முழுவதும் பயணம் மேற்கொள்ள வேண்டும். உள்ளாட்சி தேர்தலுக்கு அனைவரும் தயாராக வேண்டும். இதனை மனதில் வைத்து செயல்பட வேண்டும் என்று அறிவுரை வழங்கி உள்ளார்.
டெல்லியில் லாபி
இதற்கிடையே தான் 5 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் அமைச்சர் பதவியை பெற ராகுல் காந்தி உள்பட மேலிட தலைவர்கள் மூலமாக காய் நகர்த்த தொடங்கி உள்ளனர். இதற்கான லாபியை டெல்லியில் தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு குறைந்துள்ள நிலையில் இந்த விஜய்யின் தவெகவை பயன்படுத்தி எப்படியாவது அமைச்சராகி விட வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர்.
கிரிஷ் சோடங்கர் கருத்து
இதுபற்றி கிரிஷ் சோடங்கர் கூறுகையில், ''நாங்கள் அமைச்சர் பதவியை கேட்கவில்லை. ஆனால் தவெக அரசின் ஒரு பகுதியாக இருக்கும்படி எங்களை கேட்டு கொண்டனர். நாங்களும் சம்மதித்தோம். ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறுவது ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டரின் கனவாகும். காமராஜர் எங்களுக்குக் கற்பித்ததை மீண்டும் கட்டியெழுப்பவும், அதற்கேற்ப பணியாற்றவும் எங்கள் கட்சிக்கு இது ஒரு பெரிய வாய்ப்பாக இது இருக்கும்'' என்றார்.












Click it and Unblock the Notifications