குட்கா தடை ரத்து.. உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு.. உச்சநீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு!
டெல்லி: குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கான தடையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 2006ம் ஆண்டு உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா, சுவையூட்டப்பட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா, சுவையூட்டப்பட்ட புகையிலை பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். ஆண்டுதோறும் இதுசம்பந்தமாக அறிவிப்பாணைகளும் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன.

சென்னை உயர்நீதிமன்றம்
இந்த நிலையில் அரசின் அறிவிப்பாணையை எதிர்த்தும், குற்ற நடவடிக்கையை எதிர்த்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. அதேபோல, தடையை மீறியதாக ஒரு நிறுவனத்துக்கு அனுப்பப்பட்ட நோட்டீசை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்தும் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் மேல் முறையீடும் தாக்கல் செய்யப்பட்டது.

விசாரணை
இந்த வழக்குகள் அனைத்தையும் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் குமரேஷ் பாபு அமர்வு விசாரித்தது. அந்த விசாரணையின்போது இருதரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. தடை விதிக்கப்பட்ட சட்டத்தை குறிப்பிட்டு வாதம் வைக்கப்பட்டது. இறுதியாக உணவின் பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதி செய்வதற்காக கொண்டு வரப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தில் புகையிலையை உணவுப்பொருளாக சுட்டிக்காட்டவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதிகாரமில்லை
இருப்பினும் சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் விளம்பரப்படுத்த தடை மற்றும் விநியோக முறைப்படுத்தல் சட்டத்தில் புகையிலை பொருட்களை விளம்பரப்படுத்துவதை முறைப்படுத்துவது பற்றி மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புகையிலைப் பொருட்களுக்கு முழு தடை விதிக்க இரு சட்டங்களும் வழிவகை செய்யவில்லை. அதோடு தடை விதிக்கும் அதிகாரத்தை வழங்கவில்லை.

நீதிமன்றம் உத்தரவு
இருப்பினும் கூட உணவு பாதுகாப்பு சட்டத்தில் அவசர நிலை கருதி தற்காலிகமாக தடை செய்ய மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் உணவு பாதுகாப்பு ஆணையர் தனது அதிகாரத்தை மீறி, புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தனர். இந்த அறிவிப்பாணையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட குற்ற நடவடிக்கைகளையும் ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மா.சுப்பிரமணியன்
பின்னர் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களுக்கு தடைவிதித்த உணவு பாதுகாப்பு ஆணையரின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து தமிழ்க அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.

தமிழ்நாடு அரசு மேல்முறையீடு
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது. அதில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களினால் அதிக ஆபத்து ஏற்படுவதாகவும், இதனை அடிப்படையாகக் கொண்டுதான் உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு தடை விதித்தது. இதனால் சென்னை நீதிமன்றம் இந்த தடை ஆணையை ரத்து செய்திருப்பது சரியானது அல்ல. எனவே உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சார்பாக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications