கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம்..விரைந்து செயல்படுத்த தமிழக அரசு வலியுறுத்தல்..அடம் பிடித்த கர்நாடகா
டெல்லி : கோதாவரி - காவிரி நதிகள் இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என நதிகள் இணைப்பு ஆலோசனை கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. தென் மாநில விவசாயிகளின் நீண்ட கால கனவு திட்டமான "தென்னிந்திய நதிகள் இணைப்பு", சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் உரையின் போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் அறிவிக்கப்பட்டது.
தென்னிந்திய நதிகள் இணைப்பு தொடர்பாக மாநிலங்களிடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டால் திட்டத்திற்கான நிதி ஒதுக்கப்படும் எனவும் பட்ஜெட் உரையில் மத்திய நிதியமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஆலோசனை கூட்டம்
இந்நிலையில் தென்னிந்திய நதிகளை இணைக்கும் திட்டம் குறித்து ஆலோசிக்க மத்திய நீர்வளத்துறை செயலாளர் பங்கஜ் குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழகம் கர்நாடகா தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட 5 மாநிலங்கள் பங்கேற்றது. இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கிய ஆலோசனை கூட்டம் 4.20 மணி வரை நடைபெற்றது.

தமிழக அரசு வலியுறுத்தல்
இந்த கூட்டத்தில் பேசிய தமிழக நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்திப் சக்சேனா மற்றும் காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் ஆர்.சுப்பிரமணியம் ஆகியோர் கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால் தெலங்கான அரசு தரப்பில் கலந்து கொண்ட செயலாளர், தெலங்கானா மாநிலத்தின் நீர் தேவையை பூர்த்தி செய்யும் கோதாவரி-யை காவிரியுடன் இணைத்தால் மாநிலத்தில் நீர் பிரச்சனை ஏற்படும் என தெரிவித்தனர். கர்நாடகா மாநிலத்தை பொறுத்தவரை காவிரி-கோதாவரி இணைப்புக்கு கர்நாடகா அரசு எதிராக நிற்காது என்றார்.

உடன்பாடு இல்லை
அதே நேரத்தில் காவிரி-தென்பெண்ணை நதிகள் இணைப்புக்கு கர்நாடகா அரசுக்கு உடன்பாடு இல்லை என தெரிவித்தனர். காரணம் காவிரி தென்பெண்ணை நதியை இணைத்தால் அதனால் தமிழகத்திற்கு மட்டுமே அதிக பயன் எனவும் ஒருவேளை இணைக்க நிர்பந்தம் ஏற்பட்டால் கர்நாடகாவுக்கு ஒதுக்கப்படும் நீர் அளவை இறுதி செய்ய பின்னரே மேற்கொண்டு பணிகளை தொடர வேண்டும் என வலியுறுத்தினர்.

விரைவில் 4வது கூட்டம்
ஏற்கனவே 2 கூட்டங்கள் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நடத்தப்பட்ட நிலையில் 3வது கூட்டம் இன்று நேரடியாக டெல்லியில் உள்ள மத்திய நீர்வளத்துறை அமைச்சக அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விவகாரம் தொடர்பான 4வது கூட்டம் விரைவில் நடத்தப்படும் என்றும் அப்போது மாநில அரசுகள் நீர் தேவை, இணைப்புக்கான திட்டங்கள் குறித்து மேலும் விரிவாக பேசலாம் என மத்திய நீர்வளத்துறை செயலாளர் பங்கஜ் குமார் தரப்பில் கூறியதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications